பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார்: ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் பயணம்

புதுடெல்லி,

பிரதமர் மோடியை பிரான்ஸ் நாட்டுக்கு வருமாறு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ேரான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்டு, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) பிரான்ஸ் செல்கிறார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி, அணிவகுப்பு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்திய முப்படைகள் குழுவும் அணிவகுப்பில் பங்கேற்கிறது.

அதிபர் விருந்து

இப்பயணத்தின்போது, பிரான்ஸ் அதிபர் மெக்ரோனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த ஆண்டு, இந்தியா-பிரான்ஸ் ராணுவ உறவின் 25-வது ஆண்டு ஆகும். கலாசாரம், அறிவியல், பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

பிரதமர் மோடியை கவுரவிக்கும்வகையில், அதிபர் மெக்ரோன், அரசாங்க விருந்து அளிக்கிறார். தனிப்பட்ட முறையில் இரவு விருந்தும் அளிக்கிறார்.

பிரான்ஸ் நாட்டு பிரதமரையும் மோடி சந்திக்கிறார். பிரான்ஸ் நாடாளுமன்ற சபாநாயகர், செனட் தலைவர் ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

மேலும், பிரதமர் ேமாடி, பிரான்சில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடுகிறார். இந்திய, பிரான்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்திக்கிறார். பிரான்ஸ் முக்கிய பிரபலங்களையும் சந்திக்கிறார்.

அபுதாபி செல்கிறார்

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, வருகிற 15-ந் தேதி, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு செல்கிறார். ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயத் அல் நயானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

எரிசக்தி, கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, நிதிநுட்பம், பாதுகாப்பு, கலாசாரம் ஆகிய துறைகளில் விரிவான ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள்.

ஜி-20 மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக ஐக்கிய அரபு அமீரகம் அழைக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசுகிறார்கள்.

இத்தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.