தென்காசி: 2021ஆம் சட்டசபைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறுஎண்ணிக்கை நொடிக்கு நொடி பரபரப்பாக நடந்தது. இந்த மறு வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளரும் எம்எல்ஏவுமான பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் சார்பில் பழனி நாடாரும், அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று பழனி நாடார் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பதிவான வாக்குகள் மற்றும் அறிவிக்கப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைக்கு இடையே வித்தியாசம் இருப்பதாகவும் தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தபால் வாக்குகளை பதிவு செய்தது மற்றும் எண்ணியதில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என என நீதிபதி தெரிவித்தார்.
10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ரூ.10 ஆயிரத்தை வழக்கு தொடர்ந்த அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கான தேர்தல் அதிகாரியாக உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டு இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் வேட்பாளர்களோ அல்லது அவர்கள் சார்ந்த ஒரு பிரதிநிதியோ அந்த இடத்தில் இருக்கலாம் என்று கூறி நேற்று அவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை 200 போலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் வருகைக்காக காத்திருந்து 10.20 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கை நடக்கவில்லை என அதிமுக வேட்பாளர் குற்றம்சாட்டினார்.
13 சி பெட்டியில் பதிவான வாக்குகளை மட்டும் தேர்தல் அதிகாரிகள் எண்ண முயற்சிப்பதாக அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் புகாரளித்தார். 3 பெட்டிகளையும் எண்ண அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடனே நிறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அங்கு ஆய்வு செய்த பிறகு 12.10 மணியளவில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அடுத்தடுத்து பரபரப்புடனே வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. மாலையில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பழனி நாடார் 1606 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் 673 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ பழனிநாடார் வெற்றி பெற்றுள்ளார்.