புதுடெல்லி: டெல்லியில் கடந்த வாரம் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் அவரது குடியிருப்பு வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர், தான் ஒரு போலீஸ் அதிகாரி என்றும், தனது இச்சைக்கு உடன்படாவிட்டால் அப்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி அந்தக் கொடுமையைச் செய்துள்ளார். இந்நிலையில், போலீஸார் நேற்று ரவி சோலங்கி என்ற அந்த நபரைக் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “கடந்த ஜூலை 7-ஆம் தேதி இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் காரில் நெருக்கமாக இருந்த காட்சிகளை ரவி சோலங்கி அவர்களுக்குத் தெரியாமல் தன் செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து வந்த ரவி சோலங்கி அந்தப் பெண்ணை அவரது ஆண் நண்பர் காரில் இறக்கிவிட்டுச் சென்றவுடன் அவரை அணுகி மிரட்டியுள்ளார். அந்தப் பெண்ணிடம் தான் ஒரு போலீஸ்காரர் என்று கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் காரில் நெருக்கமாக இருந்ததை வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அதை அவரிடம் காட்டியும் உள்ளார். தனது இச்சைக்கு உடன்படாவிட்டால் அந்த வீடியோவை இணையத்தில் கசிய விடுவேன் என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணை மிரட்டிப் பணியவைத்து குடியிருப்பின் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் படிக்கட்டுகளின் கீழ் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண் நடந்ததை தனது ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ரவி சோலங்கி என்பவரைக் கைது செய்துள்ளோம்” என்று கூறினர்.