ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைச் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்ணின் ஆசை, கேரளாவில் பேசுபொருளாகியிருக்கிறது. ஆசைப்பட்டதுடன் நிற்காமல் இரண்டு இளைஞர்கள் வசிக்கும் முகவரிக்குட்பட்ட ரிஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் திருமணம் செய்துகொள்ள மனுவும் அளித்திருக்கிறார் அந்த இளம்பெண்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்தான் அந்த இளம்பெண். அவர் பத்தனாபுரம் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்குச் சென்று, ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட் படி பத்தனபுரத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்வதற்காக மனு அளித்திருந்தார். அதேபோல புனலூர், உறுகுந்நு பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞரைத் திருமணம் செய்வதற்காக புனலூர் ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் அதே இளம்பெண் மனு அளித்திருக்கிறார்.
ஒரே இளம்பெண், இரண்டு இளைஞர்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள இரண்டு ரெஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் மனு அளித்திருப்பது, அதிகாரிகளின் ஆய்வின்போது தெரியவந்திருக்கிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இரண்டு இளைஞர்களையும், மனு அளித்த இளம்பெண்ணையும் நேரில் அழைத்து விசாரிக்க முடிவுசெய்திருக்கின்றனர். ஒரே பெண் இரண்டு இளைஞர்களைக் காதலிப்பதால் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தாரா… அல்லது இரண்டு இளைஞர்களின் சம்மதத்துடன் அந்த முடிவை எடுத்தாரா என்பது விசாரணை முடிவில் தெரியவரும்.