திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள இலவந்தி வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (56). இவர் பல்லடம் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு வேலை முடிந்த நிலையில், அலுவலகப் பணம் ரூ.1.10 லட்சத்தை ஒரு பையில் இருசக்கர வாகனத்தில் முன்புறம் மாட்டிக்கொண்டு, பல்லடம் கடை வீதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, பணப்பை தவறி கீழே விழுந்திருக்கிறது. இதை குணசேகரன் கவனிக்காமல் சென்றிருக்கிறார்.
அந்த வழியாகச் சென்ற சின்னியகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா (27) என்பவர், அந்த பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் கட்டுக்கட்டாகப் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீஸாருக்கு பிரியா தகவலளித்தார். அங்கு வந்த பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், அந்தப் பெண்ணிடமிருந்து பையை வாங்கி, அதிலுள்ள அடையாள அட்டையைப் பார்த்தபோது, அது தபால் நிலைய தற்காலிக ஊழியர் குணசேகரனுடையது என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். கடைவீதியில் பணத்தைத் தேடி சுற்றிக் கொண்டிருந்த அவர், உடனடியாக அங்கு வந்தார். அவரிடம் விசாரணை செய்த போலீஸார், அவர் கூறிய அடையாளங்கள் மூலம் அந்தப் பணம் அவருடையதுதான் என்பதை உறுதி செய்துகொண்டு, பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். பணத்தைக் கண்டெடுத்து அதை மீண்டும் தனக்கு அளித்த பிரியாவுக்கு, குணசேகரன் நன்றி தெரிவித்தார். சாலையில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பிரியாவின் நேர்மையை பொதுமக்கள் மற்றும் போலீஸார் பாராட்டினர்.