பாரிஸ், இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் பார்னே, விமான நிலையத்தில் வரவேற்றார்.
ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘பேஸ்டிலா தினம்’ எனப்படும், அந்த நாட்டின் தேசிய தினத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
சிவப்பு கம்பள வரவேற்பு
பாரிஸ் விமான நிலையத்தில், அந்த நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்னே, பிரதமர் மோடியை வரவேற்றார்.
அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாரிசில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றார் மோடி. அங்கு, இந்திய வம்சாவளியினர் திரளாக குழுமியிருந்தனர். அவர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி பேசினார்.
இன்று நடக்க உள்ள, பிரான்சின் தேசிய தினத்தில், அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, இமானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவைகுறித்து விவாதிக்க உள்ளார். மேலும், பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
ஒத்துழைப்பு
‘இந்தியா – பிரான்ஸ் இடையேயான ராணுவ ஒத்துழைப்பின், 25வது ஆண்டில் உள்ளோம். அடுத்த, 25 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்களை உறுதி செய்யும் வகையில், இந்தப் பயணம் அமையும் என்று நம்புகிறேன்’ என, பிரான்ஸ் புறப்படுவதற்கு முன் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய குழு பங்கேற்பு!
பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி நடைபெறும் அணிவகுப்பில், நம் நாட்டின் முப்படைகளைச் சேர்ந்த, ௨௬௯ பேர் அடங்கிய குழுவும் பங்கேற்க உள்ளது. இதைத் தவிர, நம் விமானப் படைக்கு பிரான்சிடம் இருந்து வாங்கியுள்ள, மூன்று, ‘ரபேல்’ ரக போர் விமானங்களும், இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்