'இந்தியன் 2'வை கூடுதலாக 'இந்தியன் 3' ஆகவும் உருவாக்க ஆசைப்படும் ஷங்கர்
லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், இன்னும் 40 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தினால் 'இந்தியன் 2' வை இரண்டு பாகங்களாக மாற்றி 'இந்தியன் 3' என மூன்றாவது பாகமாகவும் வெளியிடலாம் என ஷங்கர் ஆசைப்படுகிறாராம். இது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடமும் பேசி வருவதாகத் தகவல். ஆனால், தயாரிப்பு தரப்பில் இந்த இரண்டாம் பாகமே போதும், மூன்றாம் பாகமெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்களாம்.
'இந்தியன் 2' படம் சில பல சர்ச்சைகள், பஞ்சாயத்துகள், விபத்து மரணங்கள் என சிக்கலில் சிக்கி இப்போதுதான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. படத்தின் சில காட்சிகளைப் பார்த்த கதாநாயகன் கமல்ஹாசன் வியப்படைந்து, இயக்குனர் ஷங்கருக்கு வாட்ச் ஒன்றையும் பரிசளித்திருந்தார். இருப்பினும் 'இந்தியன் 3' வரை எடுக்க ஆசைப்படும் ஷங்கரின் ஆசை நிறைவேறுமா என்பது விரைவில் தெரியும்.