பாலக்காடு ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ், கேரளாவில் 41 ரயில் நிலையங்களை மேம்படுத்த, ரயில்வே துறை 303.54 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ எனப்படும் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் கடந்த டிசம்பரில் அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வே கோட்டத்தில் வரும் கேரளாவில், 41 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது பற்றி பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
கேரள ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகளுக்கு, 303.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் வரும் 26 ரயில் நிலையங்களை மேம்படுத்த 195.54 கோடி ரூபாயும்; திருவனந்தபுரம் கோட்டத்தில் வரும் 15 ரயில் நிலையங்களை மேம்படுத்த, 108 கோடி ரூபாயும் அனுமதித்துள்ளனர்.
இத்திட்டத்தின்படி, திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம் உட்பட மாநிலத்தின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். இங்கெல்லாம் விரிவான நடைபாதைகள், மின்விளக்குகள், ‘வை – பை’ வசதிகள் தரப்படும்.
நடைமேடைகளை மேம்படுத்தி அவற்றில் காத்திருப்பு அறைகள், ஊனமுற்றோருக்கான வசதிகள், ‘சிசிடிவி’ கேமராக்கள் ஆகியவை அமைக்கப்படும்.இத்திட்டத்தின் வாயிலாக, ஹோட்டல் மற்றும் சில்லரை விற்பனை மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணியருக்கு அதிநவீன வசதிகள் வழங்குவது தான் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement