சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் குடியாத்தம் அருகே சென்ற போது ரயிலின் அடிப்பகுதியில் புகை கிளம்பியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ரயிலின் எஸ் 6 (S 6) பெட்டியின் சக்கரங்களுக்கிடையே புகை கிளம்பியது. உடனே டிடிஆருக்கு பயணிகள் தகவல் கூறினர். ரயில் ஓட்டுநருக்கும் தகவல் தெரிவிக்கப்பட குடியாத்தம் – ஆம்புர் ஆகிய பகுதிகளுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. தீ அணைப்பான்கள் மூலம் உடனடியாக சமயோஜிதமாக செயல்பட்டு புகையை அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
பிரேக் பிடிக்கும் பகுதியில் புகை உருவானது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு சரி செய்யப்பட்டு ரயில் பெங்களூர் புறப்பட்டுச் சென்றது.
இது முதன்முறை நடந்த சம்பவம் அல்ல. நாடு முழுவதும் ரயில்களில் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பராமரிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு சிறு சிறு பிரச்சினைகளும் உடனடியாக களையப்பட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக தண்டவாளங்களிலிருந்து ரயில்கள் இறங்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தூத்துக்குடி – மீளவிட்டான் பாதையில் திவேக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்
இன்று நிகழ்ந்த புகை உருவான சம்பவம் போல் நேற்று முன் தினம் ஒரு சம்பவம் நடைபெற்றது. அசாம் மாநிலம் திப்ருகர் – கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ( Dibrugarh – Kanniyakumari Vivek Express) ஒடிசா மாநிலத்தில் வந்து கொண்டிருந்த போது சக்கரத்தில் புகை கிளம்பியது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் புகை அணைக்கப்பட்டு ரயில் கிளம்பிச் சென்றது.
இது போன்று தொடர்ச்சியாக சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் ரயில்வே நிர்வாகம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.