Sarathkumar – பத்திரிகையாளர், டிராவல் ஏஜென்ஸி உரிமையாளர், தயாரிப்பாளர், நடிகர்.. சரத்குமாரின் மறுபக்கம்

சென்னை: Happy Birthday Sarathkumar (பிறந்தநாள் வாழ்த்துகள் சரத்குமார்) சினிமா துறையில் ரொம்பவே கஷ்டப்பட்டு முன்னேறிய சரத்குமாரின் 69ஆவது பிறந்தநாள் இன்று.

நடிகர் சரத்குமாரின் தந்தை ராமநாதன் ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றியவர். இதன் காரணமாக குடும்பத்துடன் புது டெல்லியில் இருந்தபோது சரத்குமார் அங்கு பிறந்தார். அதன் பிறகு குடும்பம் சென்னைக்கு குடி பெயர தனது பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் சென்னையிலேயே முடித்தார். சிறு வயதிலிருந்தே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த சரத்குமார் 1974ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.

பேப்பர் பாய்: அதன் பிறகு பெங்களூருவுக்கு சென்ற அவர் தினகரன் பத்திரிகையில் வேலைக்கு சென்றார். சைக்கிளில் சென்று பேப்பர் போடும் வேலையில்தான் முதலில் சேர்ந்தார். பிறகு படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்ட அவருக்கு சினிமா மீது ஆசை வந்தது. இதனால் ஒருபக்கம் தினகரன் வேலையை விட்டுவிட்டு ட்ராவல் ஏஜென்ஸி தொழிலை சென்னையில் ஆரம்பித்தார். ஒருபக்கம் பிஸ்னெஸ் நடக்க மறுபக்கம் சினிமாவில் தேடல் படலம் நடந்துகொண்டிருந்தது.

தயாரிப்பாளர்: நடிப்பதற்கு சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்ததால் தயாரிப்பாளர் ஆகலாம் என்ற முடிவில் நவரச நாயகன் கார்த்திக்கை வைத்து கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது. விட்டதை பிடிக்க மற்றொரு படத்தை தயாரித்தார் சரத். ஆனால் அப்படமும் தோல்வியை சந்திக்க சினிமாவிலிருந்து விலகக்கூடாது என முடிவெடுத்து முழு நேர நடிகர் ஆக திட்டம் தீட்டினார். அதற்காக நடிப்பு பயிற்சியும் எடுத்துக்கொண்டார்.

திருப்புமுனை தந்த புலன் விசாரணை: சரத்குமாருக்கு பெரும் திருப்புமுனையை தந்தது ஆர்.கே.செல்வமணி விஜயகாந்த்தை வைத்து இயக்கிய புலன் விசாரணை திரைப்படம். அந்தப் படத்தில் மிரட்டும் வில்லனாக தோன்றிய அவர் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார் சரத்குமார்.

ஹீரோ: ஒருகட்டத்தில் சரத்குமாருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைக்க அதனையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு சேரன் பாண்டியன், சூரியன், நாட்டாமை, சூரிய வம்சம், இந்து, மூவேந்தர், பாட்டாளி, மாயி என பல ஹிட் படங்களில் நடித்து 90களில் முன்னணி ஹீரோ என்ற இடத்தை பிடித்துக்கொண்டார். அதுமட்டுமின்றி விக்ரமுடன் விண்ணுக்கு மண்ணுக்கும், பிரபுதேவாவுடன் பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்களில் கெஸ்ட் ரோலாகவும் கலக்கியவர்.

https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-bjp-chief-annamalai-touches-the-feet-of-his-teacher-in-chennai-airport-521007.html

அரசியல் பயணம்: சரத்குமார் நடிப்பில் பிஸியாக இருந்தபோது நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தார். பிறகு தலைவராகவும் உயர்ந்தார். இதற்கிடையே திமுகவில் இணைந்து தேர்தலில் களமிறங்கிய அவர் தோல்வியடைந்தார். பிறகு சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி கடந்த 2011ஆம் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.

கலக்கும் சரத்குமார்: இடையில் சில காலம் நடிக்காமல் இருந்த சரத்குமார் சமீபகாலமாக மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் நடிப்பில் சமீபத்தில் வாரிசு, போர் தொழில் படங்கள் வெளியாகின. இவற்றில் வாரிசு கலவையான விமர்சனத்தை பெற போர் தொழில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து சரத்குமாருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் இப்போது குணசித்திர வேடங்களில் நடிக்க கடுமையான பஞ்சம் நிலவுவதாக ஒரு பேச்சு இருக்கிறது. அந்தப் பஞ்சத்தை சரத்குமார் நினைத்தால் தீர்க்கலாம். அந்த அளவுக்கு தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார் சரத்குமார். அவருக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.