புதுடில்லி, வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் கொட்டிவரும் கனமழையால் இருப்புப் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், நாளை வரை எக்ஸ்பிரஸ் மற்றும் பயணியர் ரயில்கள் உட்பட, 700க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கனமழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா மாநிலங்களிலும், புதுடில்லி, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
வரலாறு காணாத மழையால் நீர்நிலைகள் நிரம்பி, முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் நுாற்றுக்கணக்கான கிராமங்கள் தீவுகளாக மாறிஉள்ளன. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.
கனமழை காரணமாக இருப்புப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால், கடந்த 7ம் தேதி முதல் நாளை வரை, 300க்கும் மேற்பட்ட மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை வடக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. 100க்கும் அதிகமான ரயில்களின் துாரம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 200 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட நிலையில், 67 ரயில்களின் புறப்படும் இடமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 406 பயணியர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பல மாநிலங்களில் இடைவிடாமல் பெய்யும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பயணியருக்கு வழிகாட்டும் வகையில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உதவி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
அறிவிப்பு
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்தஅறிவிப்புகள், நிலையங்களில் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
வடக்கு ரயில்வேயின் பல்வேறு இடங்களில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு, பயணியருக்கு தகவல் தெரிவிக்கவும், டிக்கெட்டுகளை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணியரை, சாலை வழியாக அழைத்துச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்