Baba Black Sheep Review: `சோதிக்காதீங்கண்ணா!' இது படமா, இல்ல சுமார் ரக யூடியூப் வீடியோ ஸ்க்ரிப்ட்டா?

சேலம் மாவட்டத்தில் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் ஆண்கள் பள்ளியும், இருபாலர் படிக்கும் பள்ளியும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒன்றிணைக்கப்படுகின்றன. இதனால் சும்மாவே எதிரும் புதிருமாக அடித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட இரண்டு கேங் மாணவர்கள் ஒரே வகுப்பில் படிக்க நேர்கிறது. அதனால் இன்னுமே அதிகமாக முட்டி மோதிக்கொள்கின்றனர். கடைசி பென்ச் யாருக்கு என்பதில் சண்டை, பரீட்சையில் யார் கடைசி மார்க் என்று விநோத போட்டி, அறிவியல் கண்காட்சி தொடர்பாகப் போட்டி எனப் பல ரகளைகள் செய்கின்றனர்.

இரண்டு கேங்குக்கும் பொதுவான தோழியான அம்மு அபிராமி, அந்தப் பள்ளி மாணவர்களில் ஒருவர் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். பிரிந்துகிடக்கும் மாணவர் படை ஒன்றிணைந்து அந்தக் கடிதம் எழுதிய மாணவரைக் கண்டுபிடித்ததா, அவரின் தற்கொலையைத் தடுத்ததா என்பதே இயக்குநர் ராஜ் மோகன் இயக்கியிருக்கும் ‘பாபா ப்ளாக் ஷீப்’.

Baba Black Sheep Review

பள்ளி மாணவர்களாக ஆர்ஜே விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் போன்ற யூடியூப் சேனல் முகங்களே இதில் பிரதானப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். எல்லாருக்குமே காமெடி காட்சிகளுக்குத் தேவையான நையாண்டி உடல்மொழி, டைலாக் டெலிவரி கைகூடி வந்திருக்கிறது. ஆனால், காதல் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகளில் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது. அதனால், ஏற்கெனவே எந்தத் தாக்கமும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதையை இவர்களின் நடிப்பு எந்த வகையிலும் காப்பாற்றவில்லை. பள்ளி மாணவியாக வரும் அம்மு அபிராமிக்கும் பெரிய வேலை இல்லை.

போஸ் வெங்கட், வினோதினி, சுப்பு பஞ்சு, அபிராமி, ஓ.ஏ.கே சுந்தர் என முத்த நடிகர்கள் அத்தனை பேர் இருந்தும், அவர்கள் யாரையும் தொடக்கத்திலிருந்தே உறுதியான கதாபாத்திரங்களாக வடிவமைக்காமல், இறுதிக்காட்சிக்கு மட்டும் உபயோகித்திருக்கிறார் இயக்குநர். அதனால், வெறும் ஆக்‌ஷன் கட்டுக்கு இடையே மட்டும் வந்துபோகிறார்கள். ஒரு வசனம் கூட பேசாத சுரேஷ் சக்ரவர்த்தி, காமெடி என்ற பெயரில் சோதிக்கும் மதுரை முத்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஜி.பி.முத்து என எந்தப் பாத்திரமும் மனதில் நிற்கவில்லை.

Baba Black Sheep Review

படமே ஒரு கோர்வையாக இல்லாமல் தொடர்பற்ற காட்சிகளின் தொகுப்பாக மட்டுமே நீள்கிறது. இந்தக் காட்சிக் குவியலை ஒரு சினிமாவாக மாற்ற சுதர்சன் ஶ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் போராடியிருக்கின்றன. சந்தோஷ் தயாநிதியின் பாடல்களில் இளமை துள்ளும் இசை இருந்தும் பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசையிலும் பெரும்பாலும் படத்தின் ‘தீம் இசை’யையே மீண்டும் மீண்டும் உபயோகித்துச் சோதிக்கின்றனர்.

யூடியூப்பில் பார்த்துப் பழகிய முகங்கள் என்பதாலும், மாணவர்களின் கதாபாத்திர அறிமுகம் யூடியூப் காணொலி வடிவத்தில் சொல்லப்படுவதாலும் அந்தக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றன. பின்பு பள்ளியில் உள்ள கேங் வார், ரவுடி லீடர், ஒரு அப்பாவி நண்பன், கேங் லீடரின் காதல், திட்டிக்கொண்டே இருக்கும் வாத்தியார்கள், தேர்வுகளில், நிகழ்ச்சிகளின் மாணவர்களின் சேட்டைகள் எனப் பழக்கமான காட்சிகள் அடுத்தடுத்து ஓட்டப்படுகின்றன. முதற் பாதி முழுவதுமே ஒரு படு சுமாரான யூடியூப் காமெடி காணொலியைப் பார்த்த உணர்வையே தருகிறது. இருந்தபோதும், காமெடியாவது ரசிக்க வைக்கிறதா என்றால், அதுவும் இல்லை. 2கே கிட்ஸ் காமெடிகள் எனச் சொல்லி, போர் அடித்துப்போன 80ஸ், 90ஸ் கிட்ஸ் காமெடிகள், ஃபார்வேர்டு மெசேஜ்கள் போன்றவற்றை ஸ்டேண்ட் அப் காமெடி ஷோ போலத் தொகுத்திருக்கிறார்கள்.

Baba Black Sheep Review

பெரும்பாலான மாணவர்களின் கதாபாத்திரங்களுக்குச் சரியான அளவில் காட்சிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் எல்லாருமே ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருப்பதால், யாரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. எந்தக் கதாபாத்திர வரைவிலும் அழுத்தமில்லை, புதுமையும் இல்லை. மாணவர்களாக நடிப்பவர்களின் உடல்மொழியும், முகபாவனைகளும் மட்டுமே சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன.

பெரிய சோதனைகளுக்குப் பிறகு ஒருவழியாகக் கதை என்ற வஸ்துவுக்குள்ள இடைவேளையில் நுழைகிறது திரைக்கதை. ஆனால், அதன் பிறகுதான் முதல் பாதியே பரவாயில்லை என்ற எண்ண வைக்கிறார்கள். முதல் பாதியிலிருந்த காமெடி குறைந்துபோய் சென்டிமென்ட் டிராமாவாக டிராக்கை மாற்றி அதையும் மேம்போக்காக மட்டுமே அணுகிக் கூடுதலாகச் சோதித்திருக்கிறார்கள். அழுத்தமாகப் பேசியிருக்க வேண்டிய உணர்வுபூர்வமான காட்சிகள், பின்கதை போன்றவை வெறும் வசனங்களால் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. இந்த வசனங்களுக்குக் குரல் கொடுக்கும் வேலை மட்டுமே அபிராமிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Baba Black Sheep Review

முதற்பாதியைக் காட்சிகளாலும் பாடல்களாலும் ஆக்கிரமித்திருந்த காதல், இரண்டாம் பாதியில் காணாமல் போகிறது. மேலும், பள்ளி மாணவத் தலைவர் தேர்தலில் வென்றவர் என்ன செய்தார், இந்தப் பள்ளியில் வகுப்புகளே நடத்த மாட்டார்களா எனப் பல கேள்விகளும் எழுகின்றன. கூடுதலாக, இந்தப் பள்ளியில் யார் தற்கொலை செய்துகொள்ளப்போகிறார்கள், ஏன் செய்துகொள்ளப்போகிறார்கள் என்பதைக் கண்டறியச் சம்பந்தமே இல்லாமல் மற்றொரு பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் அம்மாவைப் பார்க்கச் செல்கிறார்கள். என்னங்க லாஜிக் இது?!

2கே கிட்ஸே இப்போது வளர்ந்து வந்து சினிமா, சமூக வலைதளங்கள் என அனைத்து வடிவிலான ஊடகங்களிலும் தங்கள் படைப்புகளால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். நிலைமை அவ்வாறு இருக்க, அளவிற்கு மீறியே தேய்த்து எடுக்கப்பட்டுவிட்ட 90ஸ் கிட்ஸ் கன்டென்ட்டுகளை, `2கே கிட்ஸ் வைப்’ எனப் பெயர் வைத்து, அதைப் பார்வையாளர்கள் தலையில் கட்டியிருக்கிறது படக்குழு.

Baba Black Sheep Review

வாட்ஸ் அப் ஃபார்வேர்டாக கூட இல்லாமல், பழங்கால எஸ்.எம்.எஸ் ஃபார்வேர்டாகச் சோதிக்க மட்டுமே செய்திருக்கிறது இந்த ‘பாபா பிளாக் ஷீப்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.