சக்சஸ்! துல்லியமாக 16வது நிமிடத்தில் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3

ஸ்ரீஹரிகோட்டா: கிரையோஜெனிக் அடுக்கு வெற்றிகரமாக பிரிந்து சந்திரயான் 3 விண்கலம் 16வது நிமிடத்தில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 179 கி.மீ தொலையில் நீள் வட்டப்பாதையில் வெற்றிகரமாக சந்திரயான் 3 நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் மிகச்சரியாக 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் சுமார் 40 நாட்கள் விண்ணில் பயணத்தை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24ஆம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளது.

சந்திரயான்-3 என்பது இஸ்ரோ நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் மூன்றாவது மிஷன் ஆகும். முதல் மிஷன் நிலவின் நீள்வட்டப் பாதையில் ஆர்பிட்டரை நிலை நிறுத்தி நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டது. இரண்டாவது மிஷனான சந்திரயான் 2 லேண்டிங்கின்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தோல்வியடைந்தது. தற்போது இஸ்ரோவின் மூன்றாவது மிஷன் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

முந்தைய தவறுகள் சரிசெய்யப்பட்டு பல்வேறு மாற்றங்கள் இதில் செய்யப்பட்டுள்ளன. சந்திரயான் 3 விண்கலத்தை எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் விண்ணுக்குச் சுமந்து சென்றது. சந்திரயான்-3 விண்கலம் மொத்தம் 3,900 கிலோ எடை கொண்டது. எல்விஎம்-3எம்-4 ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரம் கிலோமீட்டர் வரை கொண்டு சென்று விடும்.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இதுவரை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய லேண்டர்கள் எல்லாம் நிலவின் மையப் பகுதியில் இருந்து ஓரளவு வடபக்கமும் தென்பக்கமும் தள்ளித்தான் தர இறங்கியது. ஆனால் சந்திரயான்-3 தென்துருவத்திற்கு மிக அருகில் சென்று தரை இறங்க உள்ளது. சந்திரயான் 3 தான் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-3 விண்கலத்தை மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் புரோபல்சன் மாட்யூல் இது எஸ்எல்எம்பி 3 ராக்கெட்டிலிருந்து பிரிந்து சென்றவுடன் நிலவு நோக்கி பயணிக்கத் துவங்கும். நிலவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் உயரம் வரை இது பயணிக்கும். அடுத்ததாக லேண்டர் மாடுல் புரோபல்ஷனல் மாட்யூலில் இருந்து வெளியாகி நிலவில் தரையிறங்கும் பணியை துவங்கிவிடும்.

நிலவில் வெற்றிகரமாக லேண்டர் தரை இறங்கியவுடன் அதிலிருந்து ரோவர் வெளியே வரும். ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24ஆம் தேதியில் தான் ரோவர் நிலவில் இறங்கும். இது நிலவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம் 3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்ட நிலையில், S200 திட பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்துவிட்டன.

சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்ட 16வது நிமிடத்தில் 179 கி.மீ தொலைவில் நீல் வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான் 3 வின்கலத்தைச் சுமந்து செல்லும் LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. சந்திரயான்-3 விண்கலம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.

சந்திரயான்-3 விண்கலம், விண்ணில் ஏவப்பட்ட 16வது நிமிடத்தில் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலம்,புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இது இந்தியாவிற்கு பெருமை என்று கூறி இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.