HCL ஷிவ் நாடார்… தொழிலதிபர்; சமூக வளர்ச்சிக்காக பணியாற்றியவர்… 78-வது பிறந்த நாள் இன்று..!

அது, 1994-ம் ஆண்டு. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரும், நிறுவனருமான ஷிவ் நாடார், தன் பெயரில் ஓர் அறக்கட்டளையை ஆரம்பித்தார். தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கினார். ஹெச்.சி.எல் நிறுவனம் லாபத்தில் கொழித்துக்கொண்டிருந்த நேரம் அது. `இந்த நேரத்தில் இவர் ஏன் அறக்கட்டளையைத் தொடங்கி சமூக சேவையில் ஈடுபட வேண்டும்?’ என்கிற கேள்வி பரவலாக எழுந்தது. அதற்கு பதிலும் சொன்னார் ஷிவ் நாடார்.

“எங்கள் குடும்பம் பெரும் கோடீஸ்வரக் குடும்பமல்ல. அப்பா நீதிபதியாக இருந்தார். அப்போதெல்லாம் என் அம்மாவிடம் வீட்டுச் செலவுக்கு உண்டான பணம் மட்டுமே இருக்கும். அந்தச் சூழலிலும் பிறருக்கு உதவி செய்வதை அவர் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார். அதைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஹெச்.சி.எல் நிறுவனத்தைத் தொடங்கி, அதுவும் நன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்போது என் அம்மா, `நீ மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டிய நேரம் இதுதானே?’ என்று கேட்டார். அதனால்தான் இந்த அறக்கட்டளையை உருவாக்கினேன்’’ என்றார் ஷிவ் நாடார்.

ஷிவ் நாடார்

இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக ஷிவ் நாடார் வளர்ந்தது தற்செயலானது அல்ல. எந்தத் தொழிலில் இறங்கினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்கிற அவருடைய தீர்க்கதரிசனம்தான் அவருடைய வளர்ச்சிக்குக் காரணம். கிடைக்கிற வேலையைப் பார்த்துக்கொண்டு, அந்த வருமானத்தில் கொஞ்சம் சேமித்துவைத்து, காலத்தை ஓட்டுகிறவர்கள் ஒரு ரகம். `நாம் ஒருவரிடம் வேலை பார்க்கிறோமே… நாம் பலருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தால் என்ன?’ என நினைத்து அதை லட்சியமாக்கிக்கொள்பவர்கள் மற்றொரு ரகம். ஷிவ் நாடார், இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மூலைப்பொழி கிராமத்தில், 1945-ம் ஆண்டு பிறந்தார் ஷிவ் நாடார். அப்பா சிவசுப்ரமணிய நாடார் ஒரு நீதிபதி. ஆரம்பக்கல்வியை அரசுப் பள்ளிகளில்தான் படித்தார் ஷிவ் நாடார். திருச்சி, செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்தவர், தன் பள்ளி இறுதிப் படிப்புவரை அங்கேதான் பயின்றார். பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யூ.சி படிப்பை முடித்தார். அதன் பிறகு, கோயம்பத்தூரில் இருக்கும் பி.எஸ்.ஜி கல்லூரியில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார். அந்த இன்ஜினீயரிங் படிப்பு அவருக்குள் எதிர்காலத்துக்கான பல விதைகளை விதைத்தது.

ஆரம்பத்திலிருந்தே `ஏதோ ஒரு வேலை, இதில் ஸ்திரமாக நின்று பணியாற்றுவோம்’ என நினைக்கவேயில்லை ஷிவ் நாடார். `இன்னும் இன்னும்… இதைவிட பெஸ்ட்டா என்ன கிடைக்கும்?’ என்று தேடிக்கொண்டே இருந்தார். அந்த இலக்கை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தது அவர் வாழ்க்கை. 1967… முதல் வேலை. புனேவில் இருக்கும் பிரபல வால்சந்த் குழுமத்தின் (Walchand Group) `கூப்பர் இன்ஜினீயரிங் கம்பெனி’ அவரை அழைத்துக்கொண்டது. ஆனாலும், அந்த வேலையில் அவரால் ஒட்ட முடியவில்லை. `இந்த வேலை பார்ப்பதற்குத்தானா இவ்வளவு தூரம் வந்தோம்?’ என்கிற எண்ணத்தை அவரால் தடுக்க முடியவில்லை. அப்போது மற்றோர் அழைப்பு. அன்றைக்கு இந்தியாவிலேயே நான்காவது பெரிய நிறுவனமாக இருந்த டி.சி.எம் (Delhi Cloth & General Mills – DCM)-ல் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சேர்ந்துகொண்டார்.

ஒருநாள் தனக்கு நெருக்கமான, உடன் பணியாற்றும் சில நண்பர்களை அழைத்தார். “உங்களோட கொஞ்சம் பேசணும். ஆபீஸ் கேன்டீனுக்கு வர்றீங்களா?’’ என்றார். மொத்தம் ஆறு அல்லது ஏழு பேர்தான் கேன்டீனில் கூடியிருந்தார்கள். நண்பர்களோடு பேசிப் பார்த்ததில், அவர்கள் அனைவருக்குமே, தாங்கள் பார்க்கும் வேலை அலுப்பைத் தருவதாக இருப்பதைப் புரிந்துகொண்டார் ஷிவ் நாடார். “இந்த வேலையை விடணும்… வேற ஏதாவது செய்யணும்’’ என்று இறுதி முடிவை அன்றைக்கு எடுத்த ஷிவ் நாடார், அதை நண்பர்களிடமும் சொன்னார். அவர்களும் அவருடைய முடிவை ஏற்றுக்கொண்டார்கள். அது மிகப்பெரிய இலக்கை அடைவதற்காக, ஷிவ் நாடார் எடுத்துவைத்த முதல் அடி.

HCL ரோஷினி நாடார்

1975-ல் வேலையை விட்டார். அவர் நண்பர்களும் உடன் இணைந்தார்கள். புதிய தொழிலைத் தொடங்கினார். `மைக்ரோ காம்ப்’… இதுதான் அந்த நிறுவனத்தின் பெயர். அப்போது அவருடன் தொழில் கூட்டாளிகளாக இணைந்தவர்கள் அஜய் சௌத்ரி, அர்ஜுன் மல்ஹோத்ரா, சுபாஷ் அரோரா, யோகேஷ் வைத்யா, எஸ்.ராமன், மகேந்திர பிரதாப், டி.எஸ்.பூரி ஆகியோர். நிறுவனத்தின் முக்கிய வேலை, இந்தியச் சந்தைகளில் டெலிடிஜிட்டல் கால்குலேட்டர்களை விற்பனை செய்வது. தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துகொண்டிருந்தது.

மிக நிதானமாக, பொறுமையாகத் தங்களுக்கான வாய்ப்பு எப்போது வரும் எனக் காத்திருப்பார்கள். வாய்ப்பு வாசல் கதவை தட்டுவதற்கு முன்பே திறந்துவிடுவார்கள். ஷிவ் நாடார் இந்த விஷயத்தில் வெகு கவனமாக இருந்தார். அவருக்கான வாய்ப்பும் வந்தது.

இந்தியாவில் கம்ப்யூட்டர் அறிமுகமாகி, அதைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கியிருந்த காலம் அது. அந்த நேரத்தில், இங்கே மிகப்பெரிய கம்ப்யூட்டர் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டிருந்தது ஐ.பி.எம் (IBM) நிறுவனம். ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக ஐ.பி.எம் இந்தியாவைவிட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை. இந்தியாவில் கம்ப்யூட்டருக்கான தேவை அதிகம் இருப்பதைப் புரிந்துகொண்டார் ஷிவ் நாடார். இதுதான் தான் களமிறங்கவேண்டிய இடம் என்பதும் அவருக்குப் புரிந்தது. அதேநேரத்தில் உத்தரப்பிரதேச அரசாங்கம், ஐடி தொழிலை ஊக்குவிக்க முன்வந்திருந்தது.

ஹெச். சி.எல் நிறுவனம்

1976 -ல் `ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் – ஹெச்.சி.எல்’ (HCL) ஷிவ் நாடாரின் முன்னெடுப்பில் உருவானது. அந்த நிறுவனத்தை உருவாக்க அவர் போட்ட முதலீடு 1,87,000 ரூபாய். ஒரு பெரும் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்த இந்த முதலீடு போதுமா என்றால் நிச்சயம் போதாது. ஆனால், உத்தரப்பிரதேச அரசு மேலும் உதவ முன்வந்தது. `26 சதவிகித பங்கைத் தர வேண்டும்’ என்கிற நிபந்தனையோடு, 20 லட்ச ரூபாயை ஷிவ் நாடாருக்குக் கொடுத்தது. அதற்குப் பிறகு ஹெச்.சி.எல் அடைந்தது `கிடுகிடு’ உயரம். உத்தரப்பிரதேச அரசு, ஒரு கருத்தையும் சொன்னது… `நிறுவனத்தின் பெயரை `உத்தரப்பிரதேஷ் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்’ (Uttar Pradesh Computers Limited – UPCL) என்று மாற்றலாமே…’ ஆனால், அந்தக் கோரிக்கையைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை ஷிவ் நாடார். தேசிய அளவில் `ஹெச்.சி.எல்’ என்கிற பெயர்தான் ரீச் ஆகும், அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்கிற முடிவோடு இருந்தார். உத்தரப்பிரதேச அரசாங்கமும் அதற்குப் பிறகு பெயர் மாற்றம் குறித்து வற்புறுத்தவில்லை.

அது 1978-ம் ஆண்டு. அந்த கம்ப்யூட்டரின் பெயர் `HCL 8C.’ நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்தத் தோதாக இருந்தது அந்த கம்ப்யூட்டர். ஐ.பி.எம் தன் கம்ப்யூட்டரை ஒரு வருடத்துக்கு 5,00,000 ரூபாய்க்கு லீஸுக்கு விட்டிருந்தது. ஹெச்.சி.எல் நிறுவனமோ 3,00,000 ரூபாய்க்குக் கொடுத்தது. ஏ.சி-யும் பயன்படுத்தத் தேவையில்லை என்கிற சூழல். அன்றைய தேதியில், அது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்த மிகப்பெரும் புரட்சி. இந்தியாவில் மட்டுமல்ல… வெளிநாடுகளுக்கும் தன் ஹெச்.சி.எல் நிறுவனத்தை விரிவுபடுத்த முனைந்தார் ஷிவ் நாடார். சிங்கப்பூரில் ஹெச்.சி.எல் கால்பதித்தது. முதல் வருடத்திலேயே 10 லட்ச ரூபாய் வருமானத்தையும் ஈட்டி, அத்தனை பேரையும் ஆச்சர்யப்படவைத்தது.

முன்னாள் பிரதமர் மன்மேமோகன் சிங் உடன் ஷிவ் நாடார்

ஒரு பக்கம் ஐடி துறையில் வேலை குவிந்துகிடக்கிறது. இந்தியாவிலோ அதற்குப் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லை. அப்படிப்பட்ட தேர்ந்த தொழிலாளர்களை உருவாக்குவதற்காகவே, 1996-ல் தன் தந்தையின் நினைவாக `எஸ்.எஸ்.என் இன்ஜினீயரிங் காலேஜ்’-ஐ தொடங்கினார் ஷிவ் நாடார். என்.ஐ.ஐ.டி-யும் அவரால் உருவாக்கப்பட்டதுதான். தன் அறக்கட்டளை மூலமாக ஷிவ் நாடார் செய்த கொடை அபாரமானது. 2008-ம் ஆண்டு மார்ச்சில் அவருடைய தொண்டு நிறுவனம், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு வித்யாகியான் பள்ளிகளைத் தொடங்கியது. அதன் நோக்கம், உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் கிராமப்புற மாணவர்கள் 200 பேருக்கு இலவசக் கல்வி கொடுப்பது. இந்தச் சாதனை மட்டுமல்ல, அவருடைய ஹெச்.சி.எல் நிறுவனம், போயிங் விமானங்களுக்கு சாஃப்ட்வேர் தயாரித்துக்கொடுத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தியாவில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் `நம்பர் ஒன்’ என்ற இடத்தையும் பெற்றது ஹெச்.சி.எல் நிறுவனம். இதுமட்டுமல்ல, பாதுகாப்புத்துறை, வங்கித்துறை, இன்ஷூரன்ஸ், பங்குச் சந்தை, மோட்டார் தொழில்நுட்பம், நுகர்பொருள்கள், சுரங்கத்துறை, போக்குவரத்து, மருத்துவம்… என ஹெச்.சி.எல் தடம் பதிக்காத துறையே இல்லை.

தகவல் தொழில்நுட்பத்துறையில் அவருடைய மகத்தான பங்களிப்புக்காக 2008-ம் ஆண்டு, பத்மபூஷண் விருது பெற்றார் ஷிவ் நாடார். `இந்தியா டுடே’ பத்திரிகை, இந்தியாவில் செல்வாக்குமிக்க மனிதர்களில் 16-வது இடத்தை அவருக்குக் கொடுத்து கௌரவித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், `ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஷிவ் நாடாரின் பெயர் இடம்பெறாமல் இருந்ததே இல்லை. தன் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு விலையுயர்ந்த கார்களைப் பரிசளித்து, அவர்களுக்கு விடுமுறை கொடுத்து சுற்றுலாவுக்கு அனுப்பிவைப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார் ஷிவ் நாடார்.

ஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் உடன்.

2020-ம் ஆண்டு, ஹெச்.சி.எல் தலைவர் பதவியிலிருந்து விலகி, தன் மகள் ரோஷினி நாடாரை அந்தப் பதவியில் அமரவைத்து அழகுபார்த்தார் ஷிவ் நாடார். ஆனாலும், தன் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

பணம் ஒரு கட்டத்தில் அதீதமாகச் சேர்கிறதா… அதை பிறருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். இல்லாதார் வாழ்க்கையை இனிதாக்க வேண்டும் என்கிற லட்சியம் கொண்டவர் ஷிவ் நாடார். இந்த ஆண்டு, இந்திய அளவில் அதிக அளவில் நன்கொடை வழங்கிய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ஷிவ் நாடார். 2022-ம் ஆண்டு நிதியாண்டில் அவர் கல்விப் பணிகளுக்காக வழங்கிய நன்கொடை 1,161 கோடி ரூபாய். சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 3 கோடி ரூபாய்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.