மகாராஷ்டிராவில் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் மற்றும் அவரின் கட்சியை சேர்ந்த 8 தேசியவாத காங்கிரஸ் கட்சி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. அஜித் பவார் தனக்கு நிதித்துறை கொடுக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதோடு தனது ஆதரவு அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாகளை ஒதுக்கவேண்டும் என்று அஜித் பவார் பா.ஜ.க-வுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தார். பா.ஜ.க. அஜித் பவாருக்கு வருவாய்த்துறையை கொடுக்க விரும்பியது. ஆனால் அதனை அஜித் பவார் ஏற்கவில்லை. அஜித் பவார் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு அஜித் பவாருக்கு அவர் கேட்ட துறையை ஒதுக்க பா.ஜ.க. சம்மதம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் 9 பேருக்கும் இலாகா ஒதுக்கப்பட்டது. இதில் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. இதே மற்றொரு முக்கிய துறையான கூட்டுறவுத்துறை திலிப் வல்சே பாட்டீலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் சிவில் சப்ளை துறை சகன் புஜ்பாலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தரம்ராவ் பாபாவிற்கு மருந்து நிர்வாகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தனஞ்சே முண்டேவுக்கு விவசாயத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஹசன் முஸ்ரீப்பிற்கு சிறுபான்மை நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதிதி தட்கரேவிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டு இருப்பது சிவசேனாவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இது தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அப்படி இருந்தும் நிதித்துறை அஜித் பவாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதோடு அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெறவில்லை. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அந்த பதவியும் இன்னும் கிடைக்கவில்லை. எப்போது அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. “தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பிரிந்து, ஆளும் கூட்டணி அரசுக்கு வந்த பிறகு சிவசேனாவின் மதிப்பு கூட்டணி அரசில் குறைந்துள்ளது அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.