டெல்லியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கடந்த 7-ம் தேதி, தனது காதலனைக் காரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். பிறகு, காதலனே அந்தப் பெண்ணை அவரின் அபார்ட்மென்ட் வாசலில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். பெண்ணும் அபார்ட்மென்ட் உள்ளே சென்றபோது, பின்னாலேயே வந்த ஒருவர் மாணவியை அழைத்திருக்கிறார். மேலும், `உன்னை இறக்கி விட்டது யார்? நீ என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்…
காரில் நீயும் அவரும் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள் எனத் தெரியும். எல்லாம் என்னிடம் வீடியோ ஆதாரமாக இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு வா… உன்னுடைய பெற்றோரையும் அழைத்து வா…” எனக் காவல்துறை அதிகாரிப் போல பேசியிருக்கிறார். மேலும், எடுத்த ‘வீடியோவை ஆன்லைனில் போட்டுவிடட்டுமா’ என மிரட்டி அந்தப் பெண்ணை அபார்ட்மென்ட் அருகிலேயே பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், இதை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் அச்சத்தில் குழம்பி, பின் இறுதியாக தனது காதலனிடம், நடந்த விஷயங்களை விளக்கமாக தெரிவித்திருக்கிறார். உடனே, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய காதலனும், டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இந்த புகார் தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, “காரில் காதல் ஜோடி இருப்பதைப் பார்த்தப் பிறகு இருவரையும் வீடியோ எடுத்து, காரின் பின்னாலேயே குற்றம்சாட்டப்பட்டவர் வந்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, தன்னை ஒரு காவல் அதிகாரிப்போல காண்பித்து அந்தப் பெண்ணிடம் அத்துமீறியிருக்கிறார். குற்றவாளி யார் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியது என்பதால், அவர் கூறி அங்க அடையாளங்கள் மூலம் ஓவியம் வரைந்தும், சிசிடிவி கேமரா மூலமும், குற்றம்சாட்டப்பட்ட ரவி சோலங்கி என்பவரைக் கைது செய்திருக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்” எனத் தெரிவித்திருக்கிறார்.