மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து பெரும் பரபரப்பைக் கிளப்பியவர் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின். இதற்கிடையே அவரது நிலை குறித்து அமெரிக்கா சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ரஷ்யாவில் மாநிலத்தில் யாருமே எதிர்பார்க்காத சில அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறின. ரஷ்யாவில் என்ன தான் தேர்தல் என்று ஒன்று நடத்தப்பட்டாலும் அது ஒரு சர்வாதிகார நாடு தான்.
அங்கே அதிபர் புதினுக்கு தான் உட்சபட்ச அதிகாரங்கள் இருக்கிறது. அவர் நினைப்பது தான் அங்கே சட்டம். புதினுக்கு எதிராகப் போராட்டங்களைக் கூட அவ்வளவு எளிதாக அங்கே யாராலும் செய்ய முடியாது.
ரஷ்யா: இப்படியொரு சூழல் அங்கு ரஷ்யா நிலவி வரும் நிலையில், அங்குள்ள தனியார் ராணுவமான வாக்னர் குழுமத்தின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் கடந்த மாதம் திடீரென ரஷ்யா ராணுவத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினார். அங்கே புதின் தலைமையில் இருக்கும் போது இத்தனை ஆண்டுகளில் யாரும் இப்படியொரு கிளர்ச்சியைச் செய்ததே இல்லை. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்னர் குழு ரஷ்யத் தலைநகரை நோக்கிச் செல்வதாகவும் கூறப்பட்டது. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போரே ஏற்படலாம் என்றெல்லாம் கூறப்பட்டது. இருப்பினும், சில நாட்களில் நிலைமை தலைகீழாக மாறியது. வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்குச் சென்ற நிலையில், அங்கு நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே அமைதி ஏற்பட்டது. தனது கிளர்ச்சியைக் கைவிடுவதாக பிரிகோஜின் அறிவித்தார்.
பொது மன்னிப்பு: அதற்குப் பதிலாக வாக்னர் குழுவுக்கு பொது மன்னிப்பு வழங்க டீல் இறுதியானது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் சில நாட்கள் பிரிகோஜின் பெலராஸ் நாட்டிலேயே இருந்தார். சமீபத்தில் தான் அவர் அங்கிருந்து ரஷ்யா திரும்பினார். அதன் பிறகு அவர் குறித்து பெரிதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையே பிரிகோஜின் இப்போது ரஷ்யச் சிறையில் இருக்கலாம் அல்லது உயிரிழந்து கூட இருக்கலாம் என்று என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை: இது தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜெனரல் ராபர்ட் ஆப்ராம்ஸ் கூறுகையில், “நான் தனிப்பட்ட முறையில் கூறுகிறேன். இனிமேல் ப்ரிகோஜினை மீண்டும் பொதுவெளியில் நம்மால் பார்க்கவே முடியாது. அவர் சமீபத்தில் புதினை சந்தித்ததாக எல்லாம் கூறுகிறார்கள். இருப்பினும், அதையெல்லாம் நம்மால் நம்ப முடியாது. அது ஒரு செட்அப்பாக கூட இருக்கலாம். ஏனென்றால் சந்திப்பு தொடர்பாகப் படம் கூட வெளியாகவில்லை.
எனக்குத் தெரிந்து இனி இனிமேல் அவர் தலைமறைவாகவே இருக்க வேண்டும். அவரை சிறையில் கூட அடைத்திருக்கலாம். இல்லையென்றால் அவரை கையாள வேண்டிய விதத்தில் கையாண்டிருப்பார்கள், ஆனால் அவரை மீண்டும் பார்க்கவே முடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இப்போது உயிருடன் இருப்பதாகவே நான் கருதவில்லை. அப்படியே இருந்தாலும் எங்காவது கொடூரமான சிறையில் தான் இருப்பார்” என்று அவர் தெரிவித்தார்.
அதிபர் பைடன்: பிரிகோஜின் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறுகையில், “பிரிகோஜின் இப்போது எங்கே இருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவரது உணவில் பாய்சன் கலக்கப்படவும் வாய்ப்புகள் மிக அதிகம். நான் மட்டும் அவராக இருந்திருந்தால்.. ஒவ்வொரு உணவையும் டெஸ்ட் செய்த பின்னரே சாப்பிடுவேன். இருப்பினும், வரும் காலத்தில் அவருக்கு அங்கே எதிர்காலம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை” என்றார்.