திருமண உறவில் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மீது எப்போதும் சமூக விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். சமூகத்தின் பார்வையில் அவர்கள் மீதான வெறுப்புக்கும், அவதூறு சொற்களுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக, பாலியல் தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு இதன் கொடுமை இன்னும் தீவிரமாக இருக்கும்.
இந்நிலையில், “பாலியல் தொழிலாளர்களின் (Sex Workers) குழந்தைகளுக்குக் கண்ணியம் மற்றும் சமத்துவம் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருமண உறவில் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை `முறைதவறிப் பிறந்தவர்கள்’ (Illegitimate) என்று அழைக்க முடியாது” என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணையத்தால் புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றும் போது, பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் சட்டம், சுகாதாரம், தொழில் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் குறித்து அவர் பேசினார். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இக்கருத்தரங்கில் ஆராயப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில், சமத்துவத்திற்கான உரிமையை உறுதி செய்வதில் உள்ள இடைவெளியைக் குறைக்க, தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் சட்ட சேவைகளுக்கான அணுகல் பற்றிய விவாதம் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.