ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கிய போரானது, 500 நாள்களைக் கடந்து இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. உக்ரைன், அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைய முன்வந்ததையடுத்து ரஷ்யாவால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போரின் தாக்கம் உக்ரைனில் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வியலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/07a70ab9_60da_4469_be29_fe9245d113bd.jfif.jpeg)
போர் தொடங்கி ஓராண்டான பிறகும்கூட நேட்டோவில் உக்ரைன் இணைக்கப்படவில்லை. மாறாக அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவி போன்றவற்றை வழங்கி வருகிறது. கடந்த வாரம்கூட லிதுவேனியாவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்குப் புதிய பாதுகாப்பு உத்தரவாதங்களை அளிக்கத் தீர்மானம் மேற்கொண்டன.
இதற்கு உடனடி எதிர்வினையாற்றிய ரஷ்யா, தங்களின் எல்லா யுத்திகளையும் பயன்படுத்தி அமெரிக்கா உட்பட நேட்டோவின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கத் தயார் என அறிக்கை வெளியிட்டது. இத்தகைய சூழலில், அமெரிக்காவிடமிருந்து உக்ரைன் கிளஸ்டர் குண்டுகளைப் (cluster bombs) பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தங்களிடமும் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், தக்க நேரத்தில் அதனைப் பயன்படுத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Untitled_6.jpg)
இது குறித்து தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய புதின், “ரஷ்யாவிடம் போதுமான அளவு கிளஸ்டர் குண்டுகள் இருக்கின்றன. உக்ரைனிலிருக்கும் எங்கள் படைகளுக்கு எதிராக அவர்கள் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தினால், நாங்களும் உடனடி பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை இருக்கிறது” என்று கூறினார். புதின் இவ்வாறு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருப்பது உக்ரைன் உட்பட அதனை ஆதரிக்கும் நாடுகளிடையே பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.