இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண்ணை கடத்தி சென்று கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக நிர்வாகியின் மைனர் மகனும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் பாலியல் ரீதியாகப் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே இப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாஜக நிர்வாகியின் மகன் உட்பட 4 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
பலாத்காரம்: மத்தியப் பிரதேசத்தின் தாதியா மாவட்டத்தில் பெண் ஒருவரைக் கடத்திய 4 கொடூரன்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அந்த பெண் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மைனர் சிறுவர்கள் இரண்டு பேரைத் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்துள்ள போலீசார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவினால் ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகியின் மகன்: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மைனர்களில் ஒருவன் உள்ளூர் பாஜக நிர்வாகி மகன் என்பதும் தெரிய வந்துள்ளது. போலீசார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் அந்த பாஜக நிர்வாகியின் மகனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் கூறுகையில், “இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்து போலீசார் இன்னும் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவில்லை. அவர் அளிக்கும் வாக்குமூலத்தில் பாஜக நிர்வாகியின் மகள் பெயர் இருந்தால் தாராளமாக அவன் மீது நடவடிக்கை எடுக்கலாம்.. யாரும் தடுக்க மாட்டார்கள். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட மைனர் சிறுவனின் தந்தைக்கும் நோட்டீஸ் அனுப்பி தேவையான நடவடிக்கையை எடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தங்கை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன நடந்தது: இது குறித்து போலீசார் கூறுகையில், “அந்த பெண்ணையும் மூத்த சகோதரியையும் நான்கு நபர் கடத்தியதாகப் புகார் அளித்துள்ளனர். ஒரு வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று தனது சகோதரியைப் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தங்கையும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அங்குப் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், புகார் அளித்த சிறுமியையும் இவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கே ஏராளமானோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதில் குற்றவாளிகள் மீது ஐபிசி 376 D, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.