"அம்மா".. பிள்ளைகளின் படிப்புக்காக தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்

சேலம்:
தனது பிள்ளைகளின் படிப்புக்காக சேலத்தில் பெண் ஒருவர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (43). கணவரால் கைவிடப்பட்ட அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார் பாப்பாத்தி. தனது சக்தியை மீறி அவர்களின் பள்ளிப்படிப்புக்காக பாப்பாத்தி செலவு செய்தார்.

இந்நிலையில், அவரது இரண்டு பிள்ளைகளும் கல்லூரியில் சேர்ந்தனர். பள்ளிப்படிப்புக்காக செலவு செய்த பாப்பாத்தியால் அவர்களின் கல்லூரிக்கான கட்டணத்தை கட்ட முடியவில்லை. இதனால் பிள்ளைகளால் படிப்பை தொடர முடியாமல் போய்விடுமோ என எண்ணி அவர் கவலை அடைந்தார். இந்த சூழலில்தான், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறியுள்ளனர்.

இதை கேட்ட பாப்பாத்திக்கு, தான் இறந்துவிட்டால் பிள்ளைகளுக்கு பணம் கிடைக்கும். அதை வைத்து அவர்கள் கல்லூரிக்கு ஃபீஸ் கட்டி விடுவார்களே என நினைத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வேலைக்கு புறப்பட்ட பாப்பாத்தி, பேருந்து மோதி உயிரிழந்தார். அதன் பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போதுதான், வேண்டுமென்றே பாப்பாத்தி பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதும், அவர் தனது பிள்ளைகளின் படிப்புக்காகவே இந்த செயலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.