வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என்று நம்பப்படுகிறது. இந்திய பங்கு சந்தையானது கடந்த வார இறுதியில் கூட ஏற்றம் கண்டு முடிவடைந்த நிலையில், பல குறியீடுகளும் வரலாற்று உச்சத்தை தொட்டன. இது சாதகமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இந்திய சந்தையானது ஏற்றத்தை கண்டு வருகிறது.
வாரத் தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமின்றி தொடங்கினாலும், வார இறுதியில் உச்சத்தில் முடிவடைந்தது. குறிப்பாக நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 19,564.50 மற்றும் 66,060.90 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த வாரத்தில் ஐ.டி பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. இது தவிர செக்டோரல் பங்குகள் மற்றும் மெட்டல் பங்குகள், ரியால்டி, பார்மா உள்ளிட்ட பல்வேறு பங்குகளும் நல்லதொரு வருமானத்தை கண்டுள்ளன. வங்கி பங்குகள் கூட நல்ல ஏற்றம் கண்டன. தொடர்ந்து மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. அவை முறையே 1.25% மற்றும் 1.85% எனும் அளவிற்கு ஏற்றம் கண்டு முடிவடைந்தன.
முக்கிய காரணிகள்
வரும் வாரத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது காலாண்டு அறிக்கையை வெளியிட உள்ளன. இதுவும் பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது தவிர பல்வேறு சர்வதேச தரவுகள் மற்றும் உள்நாட்டு தரவுகள், அன்னிய முதலீடுகள் மற்றும் உள்நாட்டு முதலீடுகள், பருவமழை, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பலவும் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
காலாண்டு முடிவுகள்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களும் தங்களது காலாண்டு அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. வரவிருக்கும் நாட்களில் கிரிசில், எல்டிஐ மைண்ட்ட்ரீ, ஹெச்.டி.எஃப் சி வங்கி, டாடா எல்க்ஸி, இந்தஸ் இந்த் வங்கி, ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல், டாடா கம்யூனிகேஷன், கேன்ஃபின் ஹோம்ஸ், ஹெச்யுஎல், இன்ஃபோசிஸ் மற்றும் எம்பசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளன.
பருவமழை
இன்றைய நாளில் பல்வேறு மாநிலங்களும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பலத்த மழையின் காரணமாக, குறிப்பாக வட மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கடும் நிலச்சரிவு, உயிரிழப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடும் சேதத்தை கண்டுள்ளன. குறிப்பாக விவசாய உற்பத்தி என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
ஆக இந்த போக்கு என்பது இன்னும் நீடித்தால் இன்னும் விலைவாசி என்பது உச்சத்தை தொடும் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மழை வெள்ளத்தின் மத்தியில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பணவீக்கம்…
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் என்பது 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஜூன் மாதத்தில் 4.81% என்னும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 4.25% என்ற அளவுக்கு இருந்தது. இது தொடர்ந்து உணவு பொருட்கள் விலையானது அதிகரித்து வரும் சூழலில் அதிகரித்துள்ளது. இது ஜூலை மாதத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தொடர்ந்து பல்வேறு காய்கறிகள், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பலவும் விலை உச்சத்தை தொட்டு வருகின்றன. தொடர்ந்து இன்னும் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலையானது உச்சத்திலேயே இருக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது மேற்கொண்டு பணவீக்கத்தை தூண்டலாம். இது தொடர்ந்து ஆர்பிஐ-யின் இலக்கான 4% மேலாக இருந்து வருகிறது.
பொது பங்கு வெளியீடு & பட்டியல்
வரும் நாட்களில் முதன்மை சந்தையில் இரண்டு பங்குகள் தங்களது பங்கு வெளியீட்டை செய்யவுள்ளன. இது தவிர 4 நிறுவனங்கள் தங்கள் பங்கை பட்டியலிட உள்ளன.
நெட் வெப் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம் தனது பங்கை ஜூலை 17 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 475 – 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த வெளியீட்டின் மூலம் 631 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஜூலை 19 அன்று முடிவடைய உள்ளது.
இரண்டாவதாக எஸ்.எம்.இ துறையை சார்ந்த அசர்ஃபி ஹாஸ்பிட்டலும் வரும் வாரத்தில் தனது பங்கை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் வெளியீட்டு தேதி ஜூலை 17 அன்று திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜூலை 19 அன்று முடிவடைய உள்ளது. இதன் பங்கு வெளியீட்டு விலையாக ஒரு பங்குக்கு 51 – 52 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவையை வழங்கி வரும் ஆக்சிலரேட்பிஎஸ் இந்தியா ஜூலை 19 அன்றும் பட்டியலிடப்படவுள்ளது. காகா இண்டஸ்ட்ரீஸ், ட்ரோன் டெஸ்டினேஷன் மற்றும் அஹசோலார் டெக்னாலஜிஸ் நிறுவனங்களும் தங்கள் பங்குகளை ஜூலை 21 அன்று வெளியிட உள்ளன.
அன்னிய முதலீடுகள்…
சமீபத்திய மாதங்களாக தொடர்ந்து இந்திய பங்கு சந்தையில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் என்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த போக்கானது ஜூலை மாதம் முழுவதும் தொடரலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் நம்பப்படுகிறது. இம்மாதத்தின் பாதியில் 30,660 கோடி ரூபாய் அளவிலான நிதியானது சந்தைக்கு வந்துள்ளது. தொடர்ந்து இந்திய சந்தையானது 5-வது மாதமாகவே நேர் மறையான ஒரு போக்கை கண்டு வருகிறது. இதுவும் சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தை தொட ஒரு முக்கிய காரணியாகவும் இருந்து வருகிறது.
எண்ணெய் விலை…
கடந்த வெள்ளிக்கிழமையன்று கச்சா எண்ணெய் விலையானது புராபிட் புக்கிங் காரணமாக சரிவை கண்டது. எனினும் வரவிருக்கும் வாரத்தில் ஏற்றம் காணலாம் என்ற அச்சமும் இருந்து வருகிறது. அப்படி ஏற்றம் காணும் பட்சத்தில் அது பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும். இது பங்கு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆக வரவிருக்கும் வாரத்தில் இதுவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
தொடர்ந்து ஐடி பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டு வரும் நிலையில் நிஃப்டி ஐடி குறியீடானது 31,600 என்ற லெவலுக்கு மேலாக முடிவடைந்துள்ளது. அதே பேங்க் நிஃப்டி 44,500 மேலாக தொடர்ந்து இருந்து வருகிறது. இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம். இன்னும் ஏற்றம் காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதே நிஃப்டியை பொறுத்தவரையில் 19,750 என்ற புள்ளிகளை எட்டும் என்றும், அதை உடைத்தால் 20,000 என்ற புதிய மைல்கல்லை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முக்கிய சப்போர்ட் லெவலாக 19,100 – 19,300 என்ற புள்ளிகள் உள்ளது. ஆக இதுவும் கவனத்தில் கொள்வது நல்லது.
இந்தியா விக்ஸ்…
இந்தியா விக்ஸ் (ஏற்ற இறக்கம்) குறியீடானது அதிகளவிலான ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், அடுத்து வரும் 30 நாட்களுக்கு ஏற்ற இறக்கத்தை காணலாம்.
சர்வதேச சந்தைகள்
தொடர்ந்து சர்வதேச சந்தைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையும் ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரம் டவ் ஜோன்ஸ் குறியீடானது 2.3% ஏற்றத்திலும். எஸ் & பி 500 குறியீடானது 2.4% ஏற்றத்திலும், நாஸ்டாக் 3.3% ஏற்றத்திலும், எஸ் & பி 500 நடப்பு ஆண்டில் இதுவரையில் 17% ஏற்றத்தில் காணப்படுகிறது.
தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையானது உச்சத்தை எட்டி வரும் நிலையில், இது மற்ற பங்கு சந்தைகளையும் ஊக்குவிக்கிறது. ஆக வரவிருக்கும் நாட்களில் இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
முக்கிய தரவுகள் வெளிவரும் நாள்…
-
ஜூலை 17: ஜப்பானின் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி மற்றும் தொழில்துறை குறித்த முக்கிய தரவும், சீனாவின் உற்பத்தி குறித்தான தரவும், வேலையின்மை விகிதம் மற்றும் சில்லறை விற்பனை குறித்த தரவும் வெளியாகவுள்ளது.
-
ஜூலை 18: அமெரிக்காவின் சில்லறை விற்பனை, தொழில் துறை உற்பத்தி, வணிக இருப்பு என பலவும் வெளியாக உள்ளது.
-
ஜூலை 19: அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு பற்றிய தரவும், ஐரோப்பிய நாடுகளின் பணவீக்கம், உள்கட்டமைப்பு பற்றிய தரவும் வெளியாக உள்ளது.
-
ஜூலை 20: அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்த தரவு, வீடு விற்பனை குறித்த தரவும் வெளியாகவுள்ளது. இதே ஐரோப்பிய நாடுகளின் நடப்பு கணக்கு பற்றிய தரவும், ஜப்பானின் வணிக இருப்பு என பலவும் வெளியாக உள்ளன.
-
ஜூலை 21: ஜப்பானின் பணவீக்கம் குறித்தான தரவும் வெளியாக உள்ளது.
கார்ப்பரேட் அப்டேட்ஸ்…
சென்ச்சுரி டெக்ஸ்டைல், மஹிந்திரா லைஃப் பேஸ், டிடிகே ஹெல்த் கேர், யுடிஐ அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி, பிளாக் பாக்ஸ், பிசிபிஎல் ரயில்வே, ப்ளூடார்ட், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, எம்.ஆர்.எஃப், நோவர்டீஸ் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அப்போட் இந்தியா, ஏஞ்சல் ஒன், சிப்லா, டாபர் என பல்வேறு நிறுவனங்களும் தங்களது டிவிடெண்ட் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளன.