காஷ்மோர் : பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில் உள்ள, ஹிந்து கோயில் மீது, கொள்ளையர்கள் ‘ராக்கெட் லாஞ்சர்’களை கொண்டு, தாக்குதல் நடத்தி உள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தின், காஷ்மோர் பகுதியில் உள்ள, கெளஸ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஹிந்து கோயில் ஒன்று அமைந்துள்ளது.
அங்குள்ள, பாக்ரி சமூகத்தினரால் நடத்தப்படும், மத வழிபாடுகளுக்காக, ஆண்டுதோறும் இக்கோயில், திறக்கப்படும்.
இந்நிலையில், இன்று கோயில் மற்றும் கோயிலை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மீது, கொள்ளையர்கள் ‘ராக்கெட் லாஞ்சர்’களை கொண்டு, தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தகவலறிந்து, காஷ்மோர் -கந்த்கோட், எஸ்.எஸ்.பி., இர்பான் சம்மோ தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த, கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
எஸ்.எஸ்.பி., இர்பான் சம்மோ கூறுகையில்,’ எட்டு முதல் ஒன்பது பேர் கொண்ட, ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் ராக்கெட் லாஞ்சர்களால் தாக்கியுள்ளனர். தாக்குதலின்போது, கோயில் மூடப்பட்டிருந்தது. கொள்ளையர்களை தேடி வருகிறோம்,’ என்றார்.
பாக்ரி சமூதாயத்தைச் சேர்ந்த, டாக்டர் சுரேஷ் கூறுகையில்,’கொள்ளையர்களால் ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்காததால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை. எனினும், சம்பவம் குடியிருப்புவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது,’ என்றார்.
பாக்., மனித உரிமைகள் ஆணையம், தாக்குதல் குறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சிந்து மாகாணத்தின், காஷ்மோர் மற்றும் கோட்கி மாவட்டங்களில், சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
அங்கு, பெண்கள், குழந்தைகள் உட்பட, 30 ஹிந்து குடும்பங்கள் கிரிமினல் கும்பல்களால், பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள, கும்பல்கள் நவீன ஆயுதங்களால், வழிபாட்டு தலங்களையும் தாக்குகின்றனர். இது குறித்து, சிந்து மாகாண உள்துறை விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று (ஜூலை.,15)ம் தேதி, கராச்சியின், சோல்ஜர் பஜாரில் உள்ள, ஹிந்துக்களுக்கு சொந்தமான, பழைய மாரி மாதா கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்