சென்னை: Vadivelu (வடிவேலு) நடிகர் பொன்னம்பலம் வடிவேலுவுக்கு பேட்டி ஒன்றில் சவால் விடுத்திருக்கிறார்.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பல படங்களில் நடித்தவர். அவரது கால்ஷீட் இருந்தால் போதும் படம் நிச்சயம் ஹிட்டடித்துவிடும் என்ற நம்பிக்கை ஒருகாலத்தில் கோலிவுட்டில் இருந்தது. ஏன் ரஜினியேக்கூட சந்திரமுகி படம் ஆரம்பிக்கப்படும்போது முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிடுங்கள் என கூறினார். அந்த அளவு வைகைப்புயல் கோலிவுட்டில் பலமாக வீசிக்கொண்டிருந்தது.
வடிவேலுவின் அரசியல்: நிலைமை சுமூகமாக போய்க்கொண்டிருக்கும்போது விஜயகாந்த்தோடு வடிவேலுவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனவே அவருக்கு எதிராக களமிறங்குகிறேன் என்கிற பெயரில் திமுகவுக்கு ஆதரவாக 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்தார். பிரசாரம் என்பதைவிட விஜயகாந்த் மீதான தனிப்பட்ட தாக்குதல்தான் அது என பலரும் கூறினார்கள். அந்த அளவுக்கு விஜயகாந்த்தை ஒருமையிலும், தனிப்பட்ட விவகாரத்தை இழுத்தும் பேசினார் வடிவேலு.
எதிர்பாராத திருப்பம்: திமுக எப்படியும் அந்தத் தேர்தலில் வென்றுவிடும் நமக்கு எந்த ஆபத்தும் வராது என்ற நம்பிக்கையில் வடிவேலு பேசினாலும் அதிமுக – தேமுதிக கூட்டணி வென்றது. இதில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார். அதேபோல் ஜெயலலிதா முதலமைச்சராகிவிட்டார். சூழல் இப்படி இருக்க எங்கே வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் பஞ்சாயத்து வந்துவிடுமோ என அஞ்சி தமிழ் திரையுலகம் கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலுவை ஒதுக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பட வாய்ப்பு எதுவுமே அவருக்கு அமையவில்லை.
தீர்ந்த பஞ்சாயத்து: ஒருவழியாக வடிவேலுவை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் தீர்ந்து மாமன்னன் படத்திலும் நடித்திருக்கிறார். இதற்கிடையே வடிவேலு விஜயகாந்த்தை அவ்வாறு பேசியிருக்கக்கூடாது. அவர் வளர்ந்துவந்த காலத்தில் விஜயகாந்த் அவ்வளவு உதவி செய்திருக்கிறார் என பலரும் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டியில் வடிவேலு, விஜயகாந்த் விவகாரம் குறித்து பேசினார்.
பொன்னம்பலம் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய பொன்னம்பலம், “ஒரு படத்தில் வடிவேலுவுடன் நடித்தேன். அப்போது விஜயகாந்த்தை கிண்டலடிப்பதுபோல் மறைமுகமாக ஒரு வசனத்தை பேசினார். உடனே நான், விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் நீ பேசுவது தவறு. உன்னை பற்றி அப்படி மற்றவர்கள் பேசினாலும் தவறுதான் என சொன்னேன்.
தில் இருக்கா வடிவேலு: வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் வடிவேலு திணறிக்கொண்டிருந்தபோது நல்லவராகத்தான் இருந்தார். கடுமையாக போராடித்தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அது இல்லாமல் சினிமாவில் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. ஆனால் விஜயகாந்த்தை தவறாக புரிந்துகொண்டார். அவர் மீது உனக்கு (வடிவேலு) கோபம் இருந்தால் நேராக அவர் முன்பு போய் நின்று கேட்டிருந்தால் அவரே பதில் சொல்லியிருபார். அந்த தில் உனக்கு இருக்கா?.. அதை விட்டு அவரை திட்டி பேசியதெல்லாம் நல்ல செயல் அல்ல” என்றார்.