அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் குடும்பத்தினர்மீது தன்னுடைய கவனத்தைத் திருப்பியிருக்கிறது அமலாக்கத்துறை. அதன்படி, இன்று காலை முதலே சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில்… அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில்… பொன்முடியின் வீடு, சூரியா கல்வி குழுமம் மற்றும் ‘கயல் பொன்னி & கோ’ உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சோதனைக்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை.
அமைச்சர் பொன்முடி வீட்டில் CRPF போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தமிழக போலீஸார் யாரும் வீட்டின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால், அந்தச் சாலையின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து விழுப்புரம் போலீஸார் தங்களுடையக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். காலை முதலே அந்தச் சாலையில் வாகனங்களை அனுமதிக்காக விழுப்புரம் போலீஸார், சோதனைக்குப் பின்னரே யாராக இருந்தாலும் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
மேலும், அமைச்சர் பொன்முடி வீட்டின் முன்பாக தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வாகனத்தில் வந்த நோயாளியை, விழுப்புரம் போலீஸார் தடுத்து நிறுத்தி, `வாகனம் உள்ளே செல்லக் கூடாது’ எனக் கூறியிருக்கின்றனர்.
எனவே, சிகிச்சை பெற வந்த நோயாளியை 200 மீட்டர் தூரம் மருத்துவமனைக்கு கையிலேயே தூக்கி வந்தனர் அவருடைய உறவினர்கள். விழுப்புரம் போலீஸாரின் இந்த கெடுபிடியால், நோயாளிகள் இன்னலுக்கு உள்ளாகிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.