சென்னை:
காலையில் மது குடிப்பவர்களை “குடிகாரர்கள்” என்று சொன்னால் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
90 ml மதுபாட்டில் கொண்டு வருவது குறித்து ஆள் ஆளுக்கு ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள். 90 ml மதுபாட்டிலை கொண்டு வந்துவிட்டோமா என்ன? அதை கொண்டு வர வேண்டும் என பலர் விரும்புகிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டு நாங்கள் சொல்கிறோம். நிருபர்களிடம் தானே கூற முடியும். அப்பொழுதுதானே எங்களால் கருத்துகளை பெற முடியும். வீட்டை பூட்டிக்கொண்டு தனியாக பேச சொல்கிறீர்களா?
காலையில் டாஸ்மாக் கடை திறப்பதை பரிசீலித்துதான் வருகிறோம். அதுவும் நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பாக, காலையில் எங்களுக்கு மது குடிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எங்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். உடனே அவர்களை குடிகாரர்கள் என கூறி கிண்டல் செய்கிறார்கள். காலையில் மது அருந்துபவர்களை குடிகாரர்கள் எனக் கூறினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. மாலையில் குடிப்பது வேறு விஷயம். காலையில் கடுமையான வேலைகளுக்கு செல்பவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவர்கள் மது அருந்தினால் அவர்களை குடிகாரர்கள் என நாம் கூறலாமா?
அதேபோல இன்னொரு விஷயத்தையும் சொல்லி ஆக வேண்டும். மாதந்தோறும் டாஸ்மாக் கடைகளில் வருமானம் குறைவது குறித்து அரசு ஆய்வு நடத்துகிறது. அது ஏன் தெரியுமா? டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதற்காக அல்ல. அரசு மதுபானத்தை நாடாமல் யாராவது கள்ளச்சாராயம் போன்ற விஷயங்களை தேடிச் செல்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதற்காகதான் இந்த ஆய்வை நடத்துகிறோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.