சென்னை: 13 மணி நேர சோதனைக்குப் பிறகு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய விசாரணை நள்ளிரவை கடந்த நீடித்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே, அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படமாட்டார் என்று அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணியிடம் அமலாக்கத் துறை நடத்தப்பட்டுவந்த விசாரணையும் முடிவு பெற்றுள்ளது. இருவரும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினர்.
அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு: இதனிடையே, விழுப்புரம் உள்ளிட்ட அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற விசாரணை நள்ளிரவுக்கு பின் நிறைவு பெற்றது. விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீடு மற்றும் விழுப்புரத்திலேயே மற்ற இரண்டு இடங்களில் உள்ள அவரின் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்கள் என 3 இடங்களில் சோதனை நடந்தது வந்தது. இதில் விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள அமைச்சரின் பொன்முடி வீட்டில் முதலில் சோதனை நிறைவு பெற்றது. காலை 7 மணியளவில் தொடங்கிய அமலாக்கத் துறையினரின் சோதனை கிட்டத்தட்ட 15 மணி நேரத்துக்கு பிறகு தற்போது நிறைவு பெற்றது.
அதேநேரம் விக்கிரவாண்டியில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்லூரி, கயல் பொன்னி நிறுவனத்திலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் நள்ளிரவை கடந்தபின் சோதனை நிறைவு பெற்றது. இதேபோல், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை கிட்டத்தட்ட 19 மணி நேரத்துக்கு பின் முடிவுக்கு வந்தது.
ரூ.41.9 கோடி வைப்புத் தொகை பறிமுதல்?: அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைப்புத் தொகை தவிர பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது என்றும், இதில் வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவை அடங்கும் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்த ஆவணங்களும் சோதனையில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் சொகுசு காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொகுசு காரில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், இதனால் சொகுசு காரை பறிமுதல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனை பின்னணி: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். அவரது மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டிலும் இந்தச் சோதனை நடந்தப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் நேற்று காலை முதல் நடந்த 13 மணி நேரம் சோதனைக்குப் பிறகு, சென்னை நுங்காம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். சிஆர்பிஎஃப் படை வீரர்களின் துணையுடன் பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் பொன்முடியின் சொந்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மகன் கவுதம சிகாமணியையும் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் வைத்து அமலாக்கத் துறை இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சர் பொன்முடியின் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் காத்திருந்த தொண்டர்களும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு தங்களது வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் விரிவாக இங்கே > அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.80 லட்சம் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை
சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து கடந்த ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டதன் பின்புலம் விரிவாக இங்கே > அமலாக்கத் துறை சோதனை | அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கின் முழு பின்புலம்
இதனிடையே, அமலாக்கத் துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். | அதன் விவரம் > ”எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சி” – அமலாக்கத்துறை சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்