`காதல் என்பது காற்றைப் போன்றது. உங்களால் அதைப் பார்க்க முடியாது. ஆனால், உணர முடியும்.’ – அமெரிக்க நாவலாசிரியர் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் (Nicholas Sparks).
எதிர்பார்ப்பில்லாமல் ஒருவர், மற்றொருவர் மேல் அன்பு செலுத்த முடியுமா… அப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்ன… சக மனிதர்கள் மேல் பிரியமாக இருப்பதால் என்ன கிடைத்துவிடும்… நம்மை யாரும் நேசிக்காவிட்டால் என்ன குறைந்துவிடப்போகிறது… பணம், செல்வத்தைவிட அன்பு பெரிதா என்ன? – பல நூற்றாண்டுகளாக எழுப்பப்படும் கேள்விகள் இவை. காலமும் செவிட்டில் அறைந்தாற்போல அவ்வப்போது இவற்றுக்கு பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
காலை நேரம். அது, செல்போன்களைப் பழுது பார்க்கும் கடை. மெதுவாக அடியெடுத்து, படியேறி வந்தார் ஒரு முதியவர். தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பழைய மாடல் செல்போனை எடுத்தார்.
“தம்பி… இதுல என்ன பிரச்னைன்னு பாருங்க. ரொம்ப நாளா ரிப்பேரா இருக்கு…’’
கடையிலிருந்த இளைஞர், பெரியவரை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். அவர் வைத்திருந்த செல்போனை வாங்கிக்கொண்டு உள்ளே போனார். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார்.
“உங்க மொபைல்ல எந்த பிரச்னையும் இல்லை… நல்லாத்தான் இருக்கு’’ என்றபடி செல்போனை முதியவரிடம் கொடுத்தார். அவரும் அதை வாங்கிக்கொண்டார். சில விநாடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கடைக்கார இளைஞர் முதியவரையே பார்த்துக்கொண்டிருந்தார். முதியவர் முகத்தில் கவலை தோய்ந்துகிடந்தது. இளைஞர், அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதற்காகவே காத்திருந்தார்.
சில நிமிடங்கள் கழித்து முதியவர் சொன்னார்… “செல்போன்ல ஒரு பிரச்னையும் இல்லைன்னா ஏன் என் பசங்ககிட்டருந்து ஒரு போன்கூட வர மாட்டேங்குது?’’ என்று கேட்டார். அந்த இளைஞர் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் பார்த்தார். முதியவர் மெல்ல படியிறங்கி நடக்க ஆரம்பித்தார். கடைக்கார இளைஞர், அந்த முதியவர் கைத்தடியை ஊன்றியபடி மெதுவாக நடந்துபோவதை சிலைபோல பார்த்துக்கொண்டிருந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Matthias_Steiner2.jpg)
இணையதளத்தில் இந்தக் குட்டிக்கதையை வாசித்தபோது மனது கிடந்து அல்லாடியது. தந்தையிடம் ஐந்து நிமிடங்கள் உரையாடக்கூட பிள்ளைகளுக்கு நேரமில்லாமலா போனது… அந்த அளவுக்குப் பிள்ளைகளின் மனம் கல்லாகிப்போனதற்கு என்ன காரணம்… வாழ்க்கைச் சூழலா, தந்தைமேல் ஏற்பட்ட வெறுப்பா… பணத்தைத் தேடி ஓடும் கால ஓட்டமா… எதுவானாலும், உதாசீனம் செய்வது, புறக்கணிப்பது போன்றவற்றைவிட கொடுமையான வேதனை மனிதர்களுக்கு வேறு இருக்க முடியாது. அன்பு செலுத்துதல், நேசித்தல் என்னென்னவோ அற்புதங்களை நிகழ்த்தும். `முடியாது’ என நினைக்கும் பல காரியங்களை முடித்துக் காட்டும். முதியவர்களின் பிள்ளைகளைப்போல பலருக்கும் அது புரிவதில்லை. உண்மையான அன்பு என்ன செய்யும் என்பதற்கு உதாரணங்கள் எத்தனையோ உண்டு!
`ஒரு வார்த்தை, நம் வாழ்வின் அத்தனை சுமைகளிலிருந்தும், வலிகளிலிருந்தும் நம்மை விடுவித்துவிடும். அந்த வார்த்தையின் பெயர் காதல்.’ – கிரேக்க நாடகவியலாளர் சோபோகிள்ஸ் (Sophocles)
2004-ம் வருடம். ஜெர்மனியில் இருக்கும் ஸ்விக்காவ் (Zwickau) நகரம். இளம்பெண் சூசன் (Susann) தன் வீட்டிலிருந்த டி.வி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சேனலிலும், உருப்படியாக ஒரு நிகழ்ச்சிகூட இல்லை. போரடிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள், திரும்பத் திரும்பப் பார்த்த அதே பழைய படங்கள், எத்தனையோ முறை பார்த்துப் பார்த்து வெறுத்துப்போன நடன நிகழ்வுகள்… அவருக்கு வெறுப்பாக இருந்தது. சேனல்களை மாற்றிக்கொண்டே வந்தபோதுதான் ஈரோஸ்போர்ட்ஸ் சேனலில் அதைப் பார்த்தார். அதில், ஒரு பளுதூக்கும் போட்டியை ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Matthias_Steiner__GER_.jpg)
ஒருவர் வெகு லாகவமாக எடை அதிகமுள்ள ஒரு பார்பெல்லை (Barbell), அநாயாசமாகத் தூக்கிக்கொண்டிருந்தார். ஹல்க்கைப் போன்ற உடல்வாகு. இரும்புபோல இறுகிய தேகம். தொலைக்காட்சியைப் பார்த்து அவர் பெயர் மத்தியாஸ் ஸ்டீய்னெர் (Matthias Steiner), ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர் என்று அறிந்துகொண்டார். பார்த்தவுடனேயே சூசனுக்கு அந்த மனிதரைப் பிடித்துவிட்டது. `கண்டதும் காதல்’ என்பார்களே… அதுபோல. எப்படியாவது அந்த மனிதரை உடனே நேரில் பார்த்துவிட வேண்டும் என்கிற வேட்கை அவருக்குள் பொங்கியது. டைரக்டரியில் தேடி ஈரோஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் தொலைபேசி எண்ணை எடுத்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடம் தொலைபேசியில் பேசினார். மாத்தியாஸின் தொடர்பு எண்ணைக் கேட்டார். முதலில் இல்லை என்றார்கள். சூசன், திரும்பத் திரும்ப அழுத்திக் கேட்க, தயங்கினார்கள். ஒருகட்டத்தில், “நான் எப்படியாவது அவருடன் உரையாட வேண்டும்’’ என்று அழுத்திக் கேட்டதும் மாத்தியாஸின் இமெயில் முகவரியைக் கொடுத்தார்கள்.
உருகி உருகி ஒரு கடிதத்தை மாத்தியாஸுக்கு எழுதினார் சூசன். மெயிலை அனுப்பிவிட்டு, அவரிடமிருந்து பதில் வருகிறதா என்று அரை மணிக்கொரு முறை கம்ப்யூட்டரையே பார்த்துக்கொண்டிருந்தார். பதில் வந்தது. இருவரும் லோயர் ஆஸ்திரியாவில் (Lower Austria), ஓர் இடத்தில் சந்திப்பது என்று முடிவானது. அந்த குறிப்பிட்ட தினத்துக்காக பரபரப்புடன் காத்துக்கொண்டிருந்தார் சூசன். `கடவுளே… அந்த மனிதருக்கு என்னைப் பிடிக்க வேண்டுமே…’ என்று மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார். அதை சூசனின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். மாத்தியாஸுக்கும் முதல் பார்வையிலேயே சூசனைப் பிடித்துப்போனது. அவரும் காதலில் விழுந்தார்.
`நமக்குக் கிடைத்திருக்கும் முதல் கொடை வாழ்க்கை; இரண்டாவது கொடை காதல்; மூன்றாவது, பரஸ்பர புரிதல்.’ – அமெரிக்க எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் மார்ஜ் பியர்சி (Marge Piercy)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Gala_Nacht_des_Sports_2013_Wien_red_carpet_Inge_Matthias_Steiner.jpg)
மிகக் குறுகிய காலம்தான் இருவரும் பழகினார்கள். மனமொத்துப்போய் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்துவிட்டாலும் இன்னொரு சிக்கல்… மத்தியாஸ் ஆஸ்திரிய பிரஜை. சூசன் ஜெர்மனியைச் சேர்ந்தவர். ஏதாவது ஒரு நாட்டில்தான் இருவரும் சேர்ந்து வாழ முடியும். எங்கு வாழலாம்… ஜெர்மனியில் என்று முடிவெடுத்தார்கள். மத்தியாஸ் ஜெர்மனிக்குப் போனார். முதல் காரியமாக, ஜெர்மன் குடியுரிமைக்கு மனு எழுதிப்போட்டார். குடியுரிமையும் கிடைத்தது.
ஒருநாள் இரவு. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். வருமானம், இசை, அரசியல், அது இதுவென நீண்ட பேச்சு கடைசியில் பளுதூக்கும் போட்டியில் வந்து நின்றது.
“ஏன் மத்தியாஸ்… இந்த பளுதூக்கும் போட்டியில உச்சக்கட்டமான பரிசுன்னா எது?’’ என்று கேட்டார் சூசன்.
“இது என்ன… தெரியாத மாதிரி கேக்குறே… ஒலிம்பிக் பதக்கம்தான்.’’
“அதை உங்களால வாங்க முடியுமா?’’ சட்டென்று கேட்டுவிட்டார் சூசன்.
ஒரு கணம் சூசனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் மத்தியாஸ். “நிச்சயமா கண்ணு… நான் ஒருநாள் ஒலிம்பிக்குல தங்கப் பதக்கம் வாங்குவேன். அதை உனக்குப் பரிசா தருவேன், இது ப்ராமிஸ்’’ என்றார்.
`நீங்கள் அதைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லலாம். நான் அதை, காதல் என்று சொல்கிறேன்.’ – அமெரிக்க சாக்ஸபோன் இசைக்கலைஞர் டான் பயாஸ் (Don Byas).
நாம் ஒரு கணக்கு போடுகிறோம். இயற்கை ஒரு கணக்கு போடுகிறது. பரஸ்பரம் நேசித்துக்கொண்டு, அன்பான வாழ்க்கை நடத்துபவர்களின் மேல் ஊராரின் கண் பட்டுவிடும்போல. 2007, ஜூலை 17-ம் தேதி அது நடந்தது. மிக மோசமான கார் விபத்து. காரில் பயணம் செய்த சூசன் படுகாயமடைந்திருந்தார். மருத்துவமனையில் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மாத்தியாஸிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துபோனார் சூசன். மத்தியாஸ் ஒடிந்துபோனார்.
ஏற்கெனவே மத்தியாஸ் டைப்-1 சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கூடவே மன அழுத்தம், சூசனை இழந்த துயரமும் சேர்ந்துகொள்ள கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்தது. பளுதூக்கும் போட்டியில் முக்கியமானது, அதில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் உடலைப் பராமரிப்பது. உடல் எடை கச்சிதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பளுதூக்குவதில் எடையை அதிகரித்து, சாதிக்க முடியும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Matthias_Steiner___2019202181046_2019_07_21_Champions_for_Charity___1629___B70I1664.jpg)
சூசன் இறந்த சில நாள்களிலேயே 8 கிலோவரை எடை குறைந்திருந்தார் மத்தியாஸ். தொடர்ந்து பளு தூக்கும் பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. `அவ்வளவுதான்… மத்தியாஸின் ஆட்டம் குளோஸ்…’ என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் திடீரென்று கனவிலிருந்து விழித்து எழுந்ததுபோல விழித்துக்கொண்டார் மத்தியாஸ். `சூசனுக்குச் செய்துகொடுத்த சத்தியம்… அது என்னவானது… ஐயோ… அவள் என்னை என்ன நினைத்துக்கொள்வாள்… அடடா… தவறு செய்கிறோமே…’ இந்த எண்ணம் தோன்றியதும் செயலில் இறங்கினார். இடைவிடாத பயிற்சி… உடல் எடையைக் கூட்டுவதில் கவனம்… பதக்கம் ஒன்றிலேயே குவிந்துபோன எண்ணம்! அவருடைய முயற்சிக்குப் பலன் கிடைத்தது. சீனாவின், பீஜிங் நகரத்தில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. ஜெர்மனியின் சார்பாகக் கலந்துகொண்டார் மத்தியாஸ்.
பீஜிங் ஒலிம்பிக்கிலும் அவருக்கு சோதனை காத்திருந்தது. அந்த Heavyweight Weightlifting போட்டியில் மூன்று முயற்சிகள் (Attempts) இருக்கும். முதல் முயற்சி, ம்ஹூம்… அவரால் முடியவில்லை, பளுதூக்குவது பாதியிலேயே நின்றுபோனது. இரண்டாவது முயற்சி, அப்போதும் அவரால் முழுமையாக பளுவைத் தூக்க முடியாமல் நழுவவிட்டார். சக வீரர்களான லாட்வியாவைச் சேர்ந்த விக்டர்ஸ் செர்பட்டிஸ் (Viktors Ščerbatihs), ரஷ்யாவைச் சேர்ந்த எவகெனி சிகிஷேவ் (Evgeny Chigishev) இருவரும் அவரை நான்காவது இடத்துக்குத் தள்ளிவிடுவார்கள்போல இருந்தது. உள்ளுக்குள் நடுக்கம் இருந்தாலும், சூசனுக்கு செய்துகொடுத்த சத்தியம் மத்தியாஸுக்கு நினைவுக்கு வந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/A_Golden_Promise.jpg)
`இதை என்னால் தூக்க முடியும்… சூசன் எங்கிருந்தோ என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்’ என்று எண்ணிக்கொண்டார். தன் பலம் அனைத்தையும் திரட்டி பலுவைத் தூக்கினார். அன்றைக்கு நடந்தது அதிசயம், அபாரம். அசாதாரணமான எடைகொண்ட அந்த பளுவைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார் மத்தியாஸ். அவர் தூக்கிய எடை 258 கிலோ! உலகமே அந்த நிகழ்வை லைவாகப் பார்த்துக்கொண்டிருக்க, கண்களில் கண்ணீர் ததும்ப தனக்குள் சொல்லிக்கொண்டார் மத்தியாஸ்… `சூசன், உனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டேன்.’