Doctor Vikatan: பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடக்கூடாதா?

Doctor Vikatan: பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு உள்ளவர்கள் பழங்களே எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்களே… அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்

ஷைனி சுரேந்திரன்

பிசிஓஎஸ் பாதிப்பு உள்ளவர்கள் அறவே பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. எந்தெந்தப் பழங்களைச் சாப்பிடலாம் என தெரிந்து, அளவோடு சாப்பிடும்போது அவை பிரச்னைகளை ஏற்படுத்தாது.

பழங்களில் இயற்கையிலேயே சர்க்கரைச்சத்து இருக்கும். அவற்றை அப்படியே பழங்களாகச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் அவற்றை ஜூஸாகவோ, மில்க்ஷேக்காகவோ செய்து குடிப்பது மிகவும் தவறு. பிசிஓஎஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அல்லது கார்போஹைட்ரேட் சகிப்புத்தன்மையின்மை பாதிப்புகளும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் அளவு முக்கியம்.

நிறைய அளவு பழங்கள் சாப்பிடக்கூடாது. அதாவது ஒருவேளை உணவையே தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு பப்பாளியோ, அரை தர்பூசணியோ எடுத்துக்கொள்வார்கள். அப்படிச் சாப்பிடக்கூடாது. 100 முதல் 150 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். கொய்யா சாப்பிடும்போது அது மிகவும் பழுத்திருக்கக்கூடாது. பழுக்க, பழுக்க அதன் சர்க்கரைச் சத்து அதிகரிக்கும். பச்சை நிறத்தில் உள்ள கொய்யா சாப்பிடலாம்.

வெளிநாட்டு ஆப்பிள்களை தவிர்க்கவும். சிம்லா ஆப்பிள் சிறந்தது. குட்டிக்குட்டியாக இருக்கும் அதில் லேசான பச்சை நிறமும் சிவப்பு நிறமும் கலந்திருக்கும். அதைச் சாப்பிடலாம்.

பழங்கள்

வெளிநாடுகளில் இருந்து வரும் மால்டா மற்றும் மாண்டரின் வகை ஆரஞ்சுப் பழங்களில் இனிப்புச்சத்து அதிகம் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். அவற்றுக்கு பதிலாக நம்மூரில் கிடைக்கும் கமலா ஆரஞ்சு எடுத்துக்கொள்ளலாம். அதில் இனிப்புச்சத்தும் குறைவாக இருக்கும், நார்ச்சத்தும் அதிகமிருக்கும். அளவும் சிறியதாக இருக்கும்.

ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, அன்னாசி மற்றும் மாதுளம்பழம் போன்றவை ஓகே. ஆனால் பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் திராட்சை, பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றை கொஞ்சம்கூட எடுக்கவே கூடாது. இவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படும் பழங்களையும் அளவுக்கதிகமாக எடுக்கக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.