திருப்பூரை அடுத்த அவிநாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரிமளா(30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த துளசிமணி (55) என்பவரிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.27 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வட்டித் தொகையை பரிமளா செலுத்தாமல் இருந்ததால் துளசிமணியும், அவருடைய மகன் தனசேகர்(25) ஆகியோர் சேர்ந்து பரிமளாவை சாதிப் பெயரை சொல்லி திட்டியுள்ளனர்.
இதனால், மனமுடைந்த பரிமளா கடந்த 2022-ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, சாதிப் பெயரை சொல்லி தற்கொலைக்குத் தூண்டிய பிரிவின்கீழ் துளசிமணி, தனசேகர் மீது அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், துளசிமணி, மகன் தனசேகர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.