உக்ரைன்: கிரீமியாவின் பாலம் இடிந்து இருவர் பலியான சம்பவம் – பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. 17 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் போர் முடிந்த பாடில்லை. மாறாக இரு தரப்பினரும் அவ்வப்போது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி டிரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் என மாறிமாறி தாக்குதலில் ஈடுபடுகின்றன. இந்த போரானது உலக பொருளாதாரத்திலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபை வலியுறுத்தி வருகின்றன.

மிகப்பெரிய பாலம்

இந்தநிலையில் உக்ரைனுக்கு சொந்தமான கிரீமியா தற்போது முழுமையாக ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்று இருக்கிறது. சுமார் 19 கிலோ மீட்டர் உடைய இந்த பாலம் ஐரோப்பாவிலேயே மிகவும் பெரியது.

தெற்கு உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு இந்த பாலம் முக்கிய புள்ளியாக இருந்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் மீது நேற்று திடீரென டிரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்ற ஒரு தம்பதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களது மகள் படுகாயம் அடைந்தார்.

உக்ரைன் மீது குற்றச்சாட்டு

மேலும் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சுமார் 6 மணி நேரத்துக்கு பின்னரே அங்கு ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம்தான் முழு காரணம் என ரஷியா குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக ரஷிய துணை பிரதமர் மராட் குஸ்னுலின் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.