ஒரத்தநாட்டில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகளை ஒரத்தநாடு டி.எஸ்.பி உத்தரவின்பேரில் போலீஸார் கைதுசெய்து, தரதரவென இழுத்துச் சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரத்தநாட்டில் மையப்பகுதியாக வடசேரி சாலை பகுதி இருந்து வருகிறது. வங்கிகள் மற்றும் கடைகள் உள்ளிட்டவை அமைந்திருப்பதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கக்கூடிய பகுதியாக இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் நின்று பேருந்தில் ஏறக்கூடிய இடத்தில், டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இதையடுத்து குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியம் சார்பில், அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் பூட்டுப் போடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் போராட்டக் குழுவினருடன் தாசில்தார் மற்றும் டாஸ்மாக் மேலாளர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரத்தநாடு டி.எஸ்.பி பிரசன்னா உத்தரவின்பேரில் போலீஸார், வாசுகி உள்ளிட்டோரை தரதரவென இழுத்துச் சென்று, வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர். டி.எஸ்.பி-யின் இந்தச் செயல் சி.பி.எம் கட்சியினரைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இதைக் கண்டித்தும் காவல்துறை தலைமை டி.எஸ்.பி-மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செங்கிப்பட்டி, தஞ்சாவூர், திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து உ.வாசுகியிடம் பேசினோம். “பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என நான்கு மாதங்களுக்கு முன்பே போராட்டம் அறிவித்திருந்தோம். அப்போது தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில், `கால அவகாசம் கொடுங்கள், கண்டிப்பாக கடையை வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறோம்’ என்றார்.
ஆனால் தற்போது வரை டாஸ்மாக் கடை மூடப்படாமல் அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, இன்று பூட்டுப்போடும் போராட்டம் நடத்தினோம். இதில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக கலந்துகொண்டனர். நாங்கள் அண்ணா சிலையிலிருந்து கோஷமிட்டபடி ஊர்வலமாக டாஸ்மாக் கடை முன்பு சென்றோம்.
டாஸ்மாக் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அப்போது முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாசில்தார் கடையை அகற்றி விடுவதாக உறுதியாகக் கூறியிருந்தார், அவர் வர வேண்டும் என்றோம். தாசில்தார் வந்ததுடன், `கடை நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. இருந்தாலும் இந்தக் கடையை மூடிவிடுகிறோம்’ என்றார்.
போராட்டக் குழுவுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடியும் தருவாயில், திடீரென வந்த டி.எஸ்.பி பிரசன்னா, எங்களைக் கைதுசெய்வதாகச் சொன்னார். ஏன் சார், பேச்சுவார்த்தை முடிகிற நேரத்தில் கைதுசெய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, `பேரிகார்டைத் தள்ளிவிட்டீர்கள், அதற்காகக் கைதுசெய்கிறேன்’ என்றார்.
அப்படியென்றால் நீங்கள் அப்போதே கைதுசெய்ய வேண்டியதுதானே… ஏன் காத்திருந்தீர்கள் என்றோம். அதை காதில் வாங்காமல் என்னையும், போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளையும் தரதரவென இழுத்துச் சென்று, கைதுசெய்து, மண்டபத்தில் அடைத்தனர். ஜனநாயக முறையில் போராடிய எங்களிடம் அராஜகமான முறையில் நடந்துகொண்டார் டி.எஸ்.பி. பிரச்னையைத் தீர்க்க வேண்டிய அவரே அநாகரிகமாக அதிகார வரம்பு மீறி நடந்துகொண்டது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.