சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லெவ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (18) அலரி மாளிகையில் சந்தித்தார்.
இலங்கையில் குத்துச்சண்டை மற்றும் ஏனைய விளையாட்டுகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வரும் பிரதமர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுக்கு சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBA) தலைவர் நன்றி தெரிவித்ததோடு, இலங்கையில் குத்துச்சண்டையை மேம்படுத்த ரஷ்ய குத்துச்சண்டை சம்மேளனம் ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார்.
ரஷ்ய குத்துச்சண்டை சம்மேளனம் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு பெருமளவான குத்துச்சண்டை கையுறைகளை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், அவை இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் ஊடாக விநியோகிக்கப்பட உள்ளன.
மேலும், ரஷ்ய குத்துச்சண்டை சங்கம், இலங்கை குத்துச்சண்டை வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவதுடன், இந்தியாவில் நடைபெறும் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நிதியுதவி அளிக்கவும் அடுத்த சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துதவற்காக பெண் குத்துச்சண்டை வீராங்கணைகளுக்கு உஸ்பெகிஸ்தானில் பயிற்சி அளிக்கவும் வசதிகளை செய்யவுள்ளது.
இலங்கையில் குத்துச்சண்டை விளையாட்டின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட ஆதரவிற்காக சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லெவ் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, முன்னாள் உலக குத்துச்சண்டை வீரர் Roy Jones JR மற்றும் பர்னா சோல்ட், RBA உத்தியோகத்தர்கள் கிரிஷானோவ் அலெக்சாண்டர் மற்றும் அலிசா ஷெர்பசென்யா மற்றும் இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் டயன் கோமஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு.