“ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய, நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்!" – டெல்லியில் டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (20-ம் தேதி) தொடங்கவிருக்கிறது. அதில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து இன்று மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு, எம்.பி திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

நாடாளுமன்றம்

அப்போது பேசிய டி.ஆர்.பாலு, “நாளைமுதல் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. 17 நாள்கள் மட்டுமே நடைப்பெறும் இந்தக் கூட்டத்தொடரில் 31 பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என மத்திய அரசு பட்டியலிட்டு வைத்திருக்கிறது. அதில் பல விவாதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன. எனவே, எங்களின் கருத்துகளை நோட்டீஸாகக் கொடுத்திருக்கிறோம். அதில் சட்டத்துக்கும், அரசியலமைப்புக்கும் புறம்பாக நடந்துகொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெற வேண்டும், அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஏற்படும் இடையூறுகள் குறித்தும், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, நாட்டில் விஷம்போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, விலைவாசி உயர்வால் நாடு மிக மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது என்பதையும் விவாதிக்க கேட்டிருக்கிறோம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆட்சிக்கு வரும்போது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் எனக் கூறினார்கள். இந்த 9 ஆண்டுகளில் 18 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒருவருக்குக்கூட வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது.

பா.ஜ.க-வின் முக்கிய 3 வாக்குறுதிகளில் காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதுதான். இதில் மூன்றாவதாக இருக்கும் பொது சிவில் சட்டம் இப்போது இல்லை என்றாலும், அடுத்தக் கூட்டத்தில் நிறைவேற்ற விவாதிப்பார்கள். இந்தியாவின் வரலாறு காணாத மிகப்பெரும் ரயில் விபத்து ஒடிசாவில் நடந்தது. ஆனால் இது குறித்து மத்திய அரசு தயாரித்த விவாதத்துக்கான பட்டியலில் எந்தக் குறிப்பும் இல்லை. அதானல் ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறோம்.

ஒடிசா ரயில் விபத்து

டெல்லியின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு கொண்டுவரும் சிறப்புச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். ஏனென்றால், இது மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெறும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மட்டுமல்ல உலக நாடுகளில் எங்கு பிரச்னை நடந்தாலும் சமாதனப்படுத்த செல்லும் பிரதமர் மோடி, இந்தியாவின் எல்லையில் அமைந்திருக்கும் மணிப்பூருக்குச் செல்லவோ, அல்லது அது குறித்து கருத்துச் சொல்லவோ இல்லை. இத்தனைக்கும் அங்கு நடப்பது பா.ஜ.க-வின் ஆட்சி. மணிப்பூரில் காணாமல்போன சட்டத்தைக் காப்பாற்ற ராணுவம் உள்ளே சென்றிருக்கிறது. ஆனால், பா.ஜ.க அரசு இன்னும் அங்குதான் இருக்கிறது. எனவே இது குறித்தும் விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறோம்.

அனைத்து மாநிலங்களுக்கான கூட்டுறவுச் சங்கங்களின் அமைப்பு தொடர்பான சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது. இதை அனுமதித்தால் மாநிலங்களின் உரிமை முழுவதுமாக பறிபோகும் சூழல் உருவாகும். அதனால் இது குறித்தும் விவாதிக்க முடிவுசெய்திருக்கிறோம். மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்துகிறது. இவற்றின் அதிகாரிகள் அடிப்படை மனித உரிமைகளைக்கூட வழங்காமல் கடுமையாக துன்புறுத்துகிறார்கள். இது குறித்தும் விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அளித்திருக்கிறோம்.

மணிப்பூர் வன்முறை – பாஜக

வெறும் 17 நாள்களில் 31 விஷயங்கள் குறித்து விவாதிப்பது என்ற மத்திய அரசின் திட்டம், எதைப் பற்றியும் ஆழமாகப் பேசாமல் கடந்து போவதற்காகதான் எனத் தெரிகிறது. இந்த ஆட்சியில் எப்படி நாடாளுமன்றம் நடக்கக் கூடாதோ அப்படி நடக்கிறது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எங்களால் முடிந்த அளவுக்குக் குரல் கொடுப்போம். நீட் விவகாரத்தைவிட இப்போது குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் அதிமுக்கியமானவை. அடிப்படையானவை. எனவே இந்தக் கூட்டத்தில் நீட் விவகாரம் குறித்துப் பேசவில்லை.

பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் இத்தனை ஆண்டுகளில் இந்த ஒற்றுமையை இந்தியா எப்போதும் கண்டதில்லை. ஒவ்வொரு தலைவரும் பொறுப்புடன், கண்ணியத்துடன் நடந்துகொண்டார்கள். அதனால் இந்த முறை பா.ஜ.க அரசு நிச்சயம் தோற்கும். ஆளுங்கட்சியின் என்.டி.ஏ கூட்டத்தில் கலந்துகொண்ட 38 கட்சிகளில், 24 கட்சிகளுக்கு ஒரு எம்.பி-யோ அல்லது எம்.எல்.ஏ-வோ-கூட கிடையாது.

பெங்களூரூ:

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு.

ஆட்சியில் இல்லாத அ.தி.மு.க-வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு பிரதமர் மோடி சென்றிருப்பதிலிருந்து, ஆளுங்கட்சி எவ்வளவு நடுக்கத்தில் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். இந்திய வரலாற்றில், பிரதமர் நிலையில் இருப்பவர்கள் நேரடியாக தி.மு.க-வைத் தாக்கிப் பேசியது கிடையாது. ஆனால், பிரதமர் என்.டி.ஏ கூட்டத்தில் தி.மு.க-வைக் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்றால், எதிர்க்கட்சிகளின் பலத்தைப் புரிந்துகொள்ளுங்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.