சோனியா, ராகுல் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்

புதுடெல்லி: பெங்களூருவில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று முன்தினம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை எதிர்கொள்வது தொடர்பாக 26 எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தின. அந்த கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு ‘இந்தியா’ என்ற பெயரில் புதியகூட்டணிஅறிவிக்கப்பட்டது. வரும் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிட்டு பாஜக.வை தோற்கடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு சோனியா, ராகுல் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலையில் தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டனர். இந்நிலையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மத்தியபிரதேச தலைநகர் போபாலில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் விமானத்தில் எடுக்கப்பட்ட சோனியாவின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் சோனியா காந்தி ‘ஆக்சிஜன் மாஸ்க்’ அணிந்து காணப்படுகிறார்.

இப்படத்துக்கு கீழ், “அம்மா, பதற்றத்திலும் கருணையின் உருவம்” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சோனியா, ராகுல் பயணித்த விமானம் போபாலில் தரையிறக்கப்பட்டதை கட்சியின் மூத்த தலைவர்கள் ஷோபா ஓஜா உள்ளிட்டோர் அறிந்து, விமான நிலையம் வந்தனர். அவர்கள் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தனர்.

பிறகு சோனியா, ராகுல் ஆகிய இருவரும் இரவு 9.30 மணிக்கு இண்டிகோ விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டதாக ஷோபா ஓஜா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.