Sivakarthikeyan – எல்லாம் மாவீரன் செயல்.. விஜய் சேதுபதியுடன் நடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஃபேண்டஸி ஜானரில் படம் உருவாகியிருந்தது.

கலக்கல் சிவா: சிவகார்த்திகேயன் எப்போதும் ஒரே மாதிரி நடித்துவருகிறார் என்ற விமர்சனம் இருந்த சூழலில் அதனை மாவீரன் படம் மாற்றிக்காட்டியிருக்கிறது. பயந்த சுபாவம் உள்ள இளைஞராக தோன்றி ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் மாவீரனாக படத்தில் கலக்கியிருக்கிறார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் பலரும் தங்களது நல்ல ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கின்றனர்.

வசூலிலும் சூப்பர்: படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேபோல் வசூலிலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. வெளியான ஒரே வாரத்தில் இவ்வளவு வசூல் ஈட்டியிருப்பதால் நிச்சயம் நூறு கோடி ரூபாயை வசூலித்துவிடும் என்ற நம்பிக்கை எஸ்கே ரசிகர்களிடம் பிறந்திருக்கிறது.

படத்தின் ஹைலைட்: படத்தின் ஹைலைட்டாக விஜய் சேதுபதியின் குரல் இருந்தது. கதைப்படி அவரது குரல் சொல்வதை சிவகார்த்திகேயன் கேட்பதுபோல் காட்சிகள் இருந்தன. விஜய் சேதுபதிக்கும், சிவாவுக்கும் திரையுலகில் போட்டி என்று கூறப்பட்டுவந்த சூழலில் மாவீரன் படத்துக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்தது பலரது பாராட்டை பெற்றது. அதேபோல் இப்படி ஈகோ இல்லாமல் இருந்தால் நிச்சயம் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்தது கவனிக்கத்தக்கது.

சிவகார்த்திகேயனும் ரெடி: விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்தது; அதுவும் சம்பளமே வாங்காமல் வாய்ஸ் கொடுத்ததன் மூலம் ஹீரோக்களுக்குள்ளான ஈகோ பெரிதும் அடிபட்டுள்ளதாக திரை ஆர்வலர்களும் தெரிவித்துவருகின்றனர். சூழல் இப்படி சிவகார்த்திகேயன் எடுத்திருக்கும் ஒரு முடிவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி விஜய் சேதுபதியுடன் நடிக்க தயார் என அவர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மாவீரன் படத்தில் வாய்ஸ் கொடுப்பதற்கு சம்பளமே வேண்டாம் என கறாராக கூறிவிட்டு இரண்டு நாட்கள் வந்து விஜய் சேதுபதி டப்பிங் பேசினார். அவரது குரல் தனித்துவம் வாய்ந்தது. மாவீரன் படத்தில் அவரது குரல் வரும்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது குரலும் நானும் சேர்ந்துவிட்டோம். அவருடன் நடிக்க நான் காத்திருக்கிறேன்” என்றார்.

சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சும் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. போட்டியாளர்கள் என்று கருதப்பட்ட இரண்டு பேர் இணைந்து நடிக்கும்போது மற்ற ஹீரோக்களுக்குள் இருக்கும் ஈகோ உடைபட்டு அவர்களும் சேர்ந்து நடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் மல்டி ஸ்டாரர் கலாசாரம் பெருகும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.