இம்பால்: மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் இருவர் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தின்போது போலீஸார் அங்கு இருந்தும் தங்களுக்கு உதவவில்லையென பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் எழில்மிக்க மாநிலம் என்று சொன்னால் அது மணிப்பூராகத்தான் இருக்க முடியும். ஆனால், இந்த மாநிலம் தற்போது ரத்த கரையால் சிவந்திருக்கிறது. இதற்கு பாஜகதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தற்போது இம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஆனால் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வர பயன்படுத்திய தேர்தல் யுக்திகள், இப்போது அக்கட்சிக்கே பேக் ஃபயர் ஆகியுள்ளது.
இம்மாநிலத்தில் இரண்டு வகையான இன குழுக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். ஒன்று மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினர். இரண்டாவது, மாநிலத்தின் பூர்வகுடிகளான குக்கி+நாகா எனும் பழங்குடியினர். இதில் மைத்தேயி/மெய்டெய் சமூகத்தினரின் எண்ணிக்கை 53 சதவிகிதம். எனவே வாக்குகள் அதிகம். இதனை கவனித்த பாஜக சமீபத்திய தேர்தல் வாக்குறுதியில் மைத்தேயி/மெய்டெய் சமூக மக்களுக்கு பழங்குடி சமூகத்தினருக்கான அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
இப்படி அறிவித்ததற்கு காரணமும் இருக்கிறது. அதாவது, குக்கி மக்கள் காடுகளிலும், காடுகள் சார்ந்த சமவெளி பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. அதேபோல வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றிலும் 31 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். ஆனால் மைத்தேயி/மெய்டெய் சமூகத்தினர் இந்துக்கள் (OBC). எனவே தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மைத்தேயி/மெய்டெய் சமூகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி சேர்த்தால் தங்களது உரிமைகள் பறிபோய்விடும் என்பதால் குக்கி மக்கள் இந்த கோரிக்கையை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் நெருங்குவதால் மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடி சமூகத்தில் சேர்ப்பதாக பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. எதிர்பார்த்ததை போலவே பெரும்பான்மை வாக்குகளை பெற்று தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மைத்தேயி/மெய்டெய் மக்கள் வலியுறுத்தினர்.
இது நீதிமன்றம் வரை சென்ற நிலையில், நீதிமன்றமும் மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடியினர் சமூகத்தில் சேர்ப்பது குறித்து மாநில அரசுக்கு வழிகாட்டியது. அதுவரை அமைதி காத்த குக்கி+நாகா சமூக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட தொடங்கினர். உடனே மைத்தேயி/மெய்டெய் மக்களும் போராட்டத்தில் குதிக்க கலவரம் வெடித்தது.
இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 135க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபொல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர் மோடி தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் பிரதமர் இது குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை இயற்றியிருந்தது. அதில், “சிறுபான்மையினர், பெண்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் நடைபெறும் வன்முறையானது மத ரீதியாகவும் இன ரீதியாகவும் நடைபெறுகிறது.
குறிப்பாக சொல்வதெனில் இந்துக்கள் அதிகம் இருக்கும் மைதேயி இன மக்களுக்கும், கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் குக்கி இன மக்களுக்குமிடையில் வன்முறை நீடித்துவருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த வன்முறை தொடர்பாக மனித உரிமைக் குழுக்கள் அளித்திருக்கும் அறிக்கையில்,
“இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் அரசு தேசிய அளவில் குறிப்பிட்ட மதச் சிறுபான்மையினரை ஒடுக்கும், பிளவுபடுத்தும் இனவாதக் கொள்கைகளைச் செயல்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றன” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் இருவரை வன்முறை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்த சென்று, அருகே இருந்த வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்த 32 கி.மீ தொலைவுள்ள ஓர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பிரச்னை பெரியதாக உருவாகி வருகிறது. அதேபோல இதில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் ‘தி வயர்’ இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில், “எங்களை வன்முறை கும்பல் புதருக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றபோது அங்கு இருந்த போலீஸ் ஜீப்பில் 4 போலீசார் அமர்ந்திருந்தனர். அவர்கள் எங்களை பார்த்தனர். ஆனால் எங்களுக்கு உதவவில்லை” என்று கூறியுள்ளனர். மத்திய அரசின் ஆதரவோடுதான் இந்த வன்முறைகள் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் தற்போது கூறியுள்ள விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாய் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.