மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான `மாவீரன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பேன்டஸியான கதையில் மக்களுக்கு எனப் புதிதாகக் கட்டப்படும் நகர்புற மேம்பாட்டு வாரிய வீடுகளின் தரம் குறித்த பிரச்னை இப்படத்தில் பேசப்பட்டிருக்கிறது. தரமற்ற பொருள்கள் மூலம் கட்டப்படும் வீடுகள் கதையின் மையக்கருவாக உள்ளது. பலரும் இப்படத்தை பாராட்டி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் இப்படத்தைப் பாராட்டியிருக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் மாவீரன் திரைப்படத்தைப் பார்த்தப்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தொல்.திருமாவளவன், “ மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். சில காட்சிகளில் கண்கலங்க வைத்தது. மக்கள் குரலின் பிரதிபலிப்பாக இப்படம் இருக்கிறது. மக்கள் வெளியேற்றப்படும் போது புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு நிலை ஏற்படும் போது அந்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை சித்தரிக்கிற திரைப்படமாக மாவீரன் விளங்குகிறது. ஏழை எளிய மக்களின் சூழ்நிலைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.