டி.கே.சிவக்குமார்… ஆத்தி 1,413 கோடி ரூபாய் சொத்து… இந்தியாவிலேயே நம்பர் ஒன் எம்.எல்.ஏ இவர் தானாம்!

தேர்தலின் போது வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பு விவரங்களை வேட்புமனுவில் தாக்கல் செய்வர். இந்த தகவல்களை தேசிய அளவில் சேகரித்து பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் அசோசியேஷன் ஃபார் டெமகிராடிக் ரிபார்ம்ஸ் (ADR) மற்றும் நேஷனல் எலக்‌ஷன் வாட்ச் (NEW) ஆகிய நிறுவனங்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்து சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு

இவர்கள் 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,001 நடப்பு எம்.எல்.ஏக்கள் குறித்து ஆய்வு செய்திருந்தனர். இதுதொடர்பான பட்டியலில் கர்நாடகா மாநில துணை முதலமைச்சரும், மாநில
காங்கிரஸ்
கமிட்டி தலைவருமான டிகே சிவக்குமார் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1,413 கோடி ரூபாய் ஆகும். இதில் அசையா சொத்து 273 கோடி ரூபாய்.

டி.கே.சிவக்குமார் தான் முதலிடம்

அசையும் சொத்து 1,140 கோடி ரூபாய். டி.கே.சிவக்குமாருக்கு உள்ள கடன் 265 கோடி ரூபாய் என்று தேர்தல் ஆணையத்திடம் அளித்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

கர்நாடகா முதலமைச்சர் நாற்காலி

அதேசமயம் முதலமைச்சர் நாற்காலிக்கு சித்தராமையா உடன் மோதல் ஏற்பட்டது. பின்னர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி துணை முதலமைச்சர் பதவி அளித்தனர். இவர் மீது வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை பல்வேறு வழக்குகள் தொடர்ந்துள்ளன.

கர்நாடகா மாநில எம்.எல்.ஏக்கள்

இவற்றின் விசாரணை ஒருபுறம் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட பட்டியலில் டாப் 20 இடங்களில் 12 பேர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி இங்குள்ள மொத்த எம்.எல்.ஏக்களில் 14 சதவீதம் பேர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

2வது, 3வது இடங்களில் யார், யார்

இதை வேறெந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது எனக் கூறுகின்றனர். இரண்டாவது இடத்தில் கே.ஹெச்புட்டசுவாமி கவுடா இருக்கிறார். கர்நாடகா மாநிலம் கவுரிபிடனூர் தொகுதியை சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு 1,267 கோடி ரூபாய் ஆகும். 3வது இடத்தில் கர்நாடகாவை சேர்ந்த பிரிய கிருஷ்ணா உள்ளார்.

டாப் 20 எம்.எல்.ஏக்கள் லிஸ்ட்

இவருடைய சொத்து மதிப்பு 1,156 கோடி ரூபாய் ஆகும். இந்த பட்டியலில் டாப் 20க்குள் இடம்பிடித்த மற்ற கர்நாடகா எம்.எல்.ஏக்கள் யார் என பார்த்தால், பி.எஸ்.சுரேஷா, என்.ஏ.ஹாரிஸ், ஹெச்.கே.சுரேஷ், ஆர்.வி.தேஷ்பாண்டே, எம்.ஆர்.மஞ்சுநாத், எஸ்.என்.சுப்பாரெட்டி, ஷாமனூர் சிவசங்கரப்பா, எம்.கிருஷணப்பா, மணிரத்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.