தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். ‘என் மண், என் மக்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபயணத்தை ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்கள் வழியாக பயணித்து ஆறு மாதங்களுக்கு பின்னர் இந்த பயணம் சென்னையில் நிறைவடைகிறது.
அண்ணாமலையில் இந்த நடை பயணம் மூலம் தமிழ்நாட்டில் கிராமங்கள், சிறு நகரங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பாஜகவை கொண்டு செல்லும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட உள்ளார். இந்த நடை பயணம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடை பயணத்தின் போது மக்களிடம் தமிழ்நாடு அரசு மீதான புகார்களை கேட்டு பெறுவதற்கு ‘மக்கள் புகார் பெட்டி’ கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி மீதான புகார்களை வாங்கி வந்து அது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும், ஒன்றிய அரசுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் அண்ணாமலை மீது நல்ல அபிப்ராயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கையை இஸ்லாம் மதத்தின் மீது திணிக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.
அண்ணாமலை முன்னெடுக்கும் இந்த புகார் பெட்டி திட்டம் என்பது கடந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த திட்டம். ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு புகார் பெட்டி வைத்து மக்களிடம் புகார்கள், கோரிக்கைகள் பெறப்பட்டன. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் அந்த புகார்கள் மீது தனி நடவடிக்கை எடுக்க புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரியையும் நியமித்தார் ஸ்டாலின். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த பாணியை தான் அண்ணாமலை தற்போது கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள். ஏற்கனவே ராகுல் காந்தியை பின் தொடர்ந்து தான் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது ஸ்டாலினை பின்பற்றி புகார் பெட்டியை கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்.