திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கலாமணி. இவர் அதேப் பகுதியில் தாராபுரம்-திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இன்று காலை, திருச்சியில் இருந்து திருப்பூருக்கு சிமென்ட் கலவை ஏற்றி வந்த லாரியை ரத்தினகுமார் என்பவர் ஓட்டி வந்திருக்கிறார். சூரியநல்லூர் பகுதியைக் கடக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடைக்குள் புகுந்தது.
இதில், கடையில் பணியாற்றி வந்த முத்துசாமி (62), குப்பன் (70) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் ரத்தினகுமாரை (28) அங்கிருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் டீ கடையில் அமர்ந்திருந்த நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன் (20), குப்பண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (67), செல்லமணி (64) முத்துசாமி (60) மாணிக்கம் (46) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான குண்டடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.