சென்னை: மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
அவரது இரண்டாவது படமான ‘கைதி’ ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கைதி, லோகேஷின் LCU கான்செப்ட்டுக்கு தொடக்கமாக அமைந்தது.
இந்நிலையில், தலைவர் 171 படத்தால் கைதி 2 ட்ராப் ஆகும் என சொல்லப்பட்டதற்கு லோகேஷ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கைதி 2 இல்லன்னா LCU கிடையாது: மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தற்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கலக்கி வருகிறார். கடந்தாண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து மிரட்டினார். இதன் தொடர்ச்சியாக விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், லோகேஷின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளாரம். இதுகுறித்த அபிஸியல் அப்டேட் லியோ ரிலீஸுக்குப் பின்னர் வெளியாகும் என தெரிகிறது. ஆனால், முன்னதாக லோகேஷ் கனகராஜ் கைதி 2ம் பாகத்தை இயக்கவிருப்பதாக சொல்லப்பட்டது.
லோகேஷ் இயக்கிய இரண்டாவது படமான கைதி 2019ம் ஆண்டு வெளியானது. கார்த்தி – லோகேஷ் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம், இருவரது கேரியரையும் உச்சம் கொண்டு சென்றது. முக்கியமாக கைதியில் இருந்தே தனது LCU கான்செப்ட்டை விக்ரம் படத்தில் கொண்டு வந்தார் லோகேஷ். விக்ரம் படத்தின் இறுதிக்காட்சிக்கு முன்பு கார்த்தியின் வாய்ஸ் ஓவர், சின்ன க்ளிம்ப்ஸ் போன்றவையும் இடம்பெற்றது.
அதேபோல், ரோலக்ஸ் கேரக்டரில் மிரட்டிய சூர்யாவிடம் டில்லி என்ற கார்த்தியின் கேரக்டர் குறித்து அர்ஜுன் தாஸ் பேசுவதும் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்தது. இதனால், கைதி 2ம் பாகத்தில் சூர்யா – கார்த்தி இருவரும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென தலைவர் 171 அப்டேட் வைரல் ஆனதால், கைதி 2 ட்ராப் ஆகும் என செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசியுள்ள லோகேஷ், கண்டிப்பாக கைதி 2 உருவாகும் எனக் கூறியுள்ளார்.
மேலும், கைதி 2 இல்லையென்றால் LCU கான்செப்ட்டே கிடையாது எனத் தெரிவித்துள்ளார். அதேநேரம் லியோவுக்குப் பிறகு இன்னொரு படத்தை இயக்கிய பின்னரே கைதி 2ம் பாகம் உருவாகும் என லோகேஷ் கன்ஃபார்ம் செய்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தில் சூர்யா நடிக்கலாம் என மீண்டும் லீட் கிடைத்துள்ளது. இன்னொரு வில்லன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.