மும்பை: மணிப்பூரில் கடந்த மே 4ம் தேதி நடந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பழங்குடியின மக்களை அப்புறப்படுத்தும் நோக்குடன் சில மாதங்களாகவே அங்கே இரு தரப்பட்ட சாதியினர் இடையே பெரும் கலவரம் வெடித்து வருகிறது.
பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் இந்த கொடுமைகளை கண்டும் காணாமலும் இருந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் வெடித்துள்ள நிலையில், இரு பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றது மற்றும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது. நிர்வாணமாக அழைத்துச் சென்ற பெண்களில் ஒருவரின் சகோதரரை அடித்தே கொன்றது என பெரும் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி சில மாதங்கள் ஆகியும் எந்தவொரு நடவடிக்கையும் மாநில அரசு எடுக்காத நிலையில், அந்த வீடியோக்களை இணையத்தில் கசிய விட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த வீடியோக்களை பார்த்த பாலிவுட் பிரபலங்களான அக்ஷய் குமார், கியாரா அத்வானி, ரிச்சா சத்தா மற்றும் சோனு சுட் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
மணிப்பூர் சம்பவம்: மணிப்பூரில் குக்கி இன பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலகமாக அழைத்துச் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது.
இந்த காலத்தில் சாதிய பிரச்சனைகள் எல்லாம் இல்லை என பிரச்சாரம் பண்ணுவர்களுக்கு இந்த காட்சிகள் சாட்டையடி பதிவுகளாகவே உள்ளன. அந்த பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டது மற்றும் அங்கே நடந்த இனக் கலவரங்களுக்கு எதிராக தற்போது பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.
அக்ஷய் குமார் ஆதங்கம்: மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்தது மன்னிக்க முடியாத குற்றம். அந்த வீடியோ காட்சிகளை பார்த்து ஆடிப் போய்விட்டேன். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என நடிகர் அக்ஷய் குமார் ட்வீட் போட்டிருக்கிறார்.
கியாரா அத்வானி கண்டனம்: இவங்களாம் மனுஷங்கதானா, ரொம்பவே வெட்க்கேடான விஷயம். பெண்களுக்கு எதிராக இப்படியொரு கொடுமை நம் இந்திய தேசத்தில் இந்த காலத்திலும் நடக்கிறதா? அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என நடிகை கியாரா அத்வானி பதிவிட்டுள்ளார்.
ரிச்சா சத்தா காட்டம்: ஷேம்ஃபுல், சட்டத்தை மீறிய மனசாட்சியற்ற செயல், இப்படியொரு கொடுமையை புரிந்தவர்களை மன்னிக்கவே கூடாது. கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என நடிகை ரிச்சா சத்தா ட்வீட் போட்டுள்ளார்.
சோனு சூட் வேதனை: மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த மோசமான கொடுமைகளை வீடியோவில் பார்த்து நாடே நடுங்கிப் போயிருக்கிறது. அங்கே மனிதாபிமானம் தான் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது, பெண்கள் அல்ல என சோனு சூட் தனது வேதனையை பதிவிட்டுள்ளார்.
மேலும், பல பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.