பொன்னியின் செல்வன் வெற்றியைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்த மாதம் ( ஆக.25) வெளியாகவுள்ள திரைப்படம் `இறைவன்’.
இப்படத்தை அஹமத் இயக்கியிருக்கிறார். அந்தோணி பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘சைரன்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். கிருத்திகா உதயநிதியுடன் ஒரு படம், ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படம் என்று தொடர்ந்து பல படங்களில் ஜெயம் ரவி கமிட் ஆகியுள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Screenshot__54_.png)
இப்படி பிஸியாக நடித்து வரும் ஜெயம் ரவி, நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டார். இதில் கலைஞரைப் புகழ்ந்து பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவை சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஜெயம் ரவி பேசியவை இங்கே….
“ கலைஞர் நம்மோடு இல்லை என்றாலும், அவருடைய கருத்துக்கள் எப்போதும் நம்மோடுதான் இருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம். என்னை எல்லோரும் கட்சி சார்பாக வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். நான் கலை சார்பாக வந்திருக்கிறேன்.
ஆனால், கட்சி சார்பாகவும் வந்திருக்கிறேன் சினிமா என்ற கட்சி சார்பாக. ஏனென்றால் கருணாதிநிதியின் முதல் கட்சி சினிமாதான். அவரை நேரில் பார்த்திருக்கிறேன் என்பதே சந்தோஷமான விஷயம்தான். அதுமட்டுமல்லாமல், கருணாநிதியின் கையால் கலைமாமணி விருது வாங்கியதை என்னால் மறக்க முடியாது. அதைவிட ஒரு பெரிய வாழ்த்து எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைக்காது. நிறைய எழுத்தாளர்கள் கதாபாத்திரங்களையும், கதாநாயகர்களையும் உருவாக்குவார்கள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/karunanidhi_pen_65351297.jpg)
ஆனால் கலைஞர் மட்டும்தான் தன் எழுத்தின் மூலம் பல தலைவர்களை உருவாக்கினார். அந்த எழுத்தின் உயிரோட்டத்தை எந்த எழுத்தாளர்களிடமும் பார்க்க முடியாது. கலைஞரின் வசனங்கள் பேசி பலர் வாய்ப்பு தேடி அலைகிறார்கள். ‘பராசக்தி’ திரைப்படத்தின் வசனத்தை பேசி நடிக்க வேண்டும் என்பது தான் பலருடைய ஆசையாக இருந்தது. ‘பராசக்தி’ பட வசனத்தில் ஐந்து சதவிகிதத்தைப் பேசி நடித்தாலே அவர் மிகப்பெரிய நடிகர் என்று கூறிவிடலாம் நானும் அதை முயற்சிக்கிறேன்.‘
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் செந்தமிழ் பேசி நடிக்க வேண்டியது இருந்தது. அப்போது கலைஞரின் வசனங்களை படித்து அந்த உச்சரிப்பை கற்றுக் கொண்டு தான் பேசினேன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/1682999895_jayam_ravi.jpg)
அவரின் சினிமா வழிக்காட்டுதலில் நாங்கள் பல பேர் வந்துவிட்டோம். அவரால் மிகச்சிறந்த நடிகர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.