இம்பால்: மணிப்பூரில் குகி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட கும்பலுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலுவான குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹிராதாஸ் (32) என்ற அந்த நபர் வியாழக்கிழமை தௌபால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக மணிப்பூர் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் உள்ள பிற நபர்களைப் பிடிக்க 12 குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது? – மணிப்பூரில் குகி ( பழங்குடி மக்கள்) – மைதேயி இன மக்களிடையே கடந்த மே மாதம் 3-ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதற்கு மறுநாள் சுமார் 800 முதல் 1,000 பேர் ஆயுதங்களை ஏந்தியபடி பி.பைனோம் கிராமத்துக்குள் நுழைந்து குகி மக்களின் சொத்துகளை சேதப்படுத்தி எரித்தனர். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
குகி மக்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு பயந்து பி.பைனோம் கிராமத்தைச் சேர்ந்த 2 ஆண்கள், 3 இளம்பெண்கள் காட்டுக்குள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களை நோங்போக் செக்மாய் போலீஸ் குழு மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது மைதேயி சமூக கும்பல் ஒன்று, அவர்களை கடத்திச் சென்றுள்ளது. இதில் இரு ஆண்களையும் கொலை செய்த அக்கும்பல், மூன்று பெண்களையும் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறது. இதில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளது. | வாசிக்க > மணிப்பூர் கொடூரம் | “அரசு தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” – உச்ச நீதிமன்றம் கொந்தளிப்பு
இதனிடையே, “எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம்” என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். அதை வாசிக்க > “மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” – பிரதமர் மோடி வேதனை