ஐரோப்பாவில் வறுத்தெடுக்கும் வெயில்- வெப்ப அலையால் மக்கள் அவதி

நியூயார்க்,

பருவநிலை மாற்றம் போன்ற காரணத்தினால் ஆங்காங்கே மேகவெடிப்பு, கடுமையான பனிப்புயல், வெள்ளம், சூறாவளி புயல் போன்ற இயல்புக்கு மீறிய அசாதாரணமான வானிலை நிலவுகிறது. சில நாடுகளில் அதீத மழைபொழிவும், சில நாடுகளில் கடுமையான வறட்சியும் காணப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் சீனாவின் வடமேற்கு மாகாணங்களில் தற்போது அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. ஜரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், கீரிஸ், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இத்தாலியின் முக்கிய நகரங்களான ரோம், சிசிலி உள்ளிட்ட 23 நகரங்களில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் அங்குள்ள நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பகல் 11 மணி தொடங்கி மாலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 112 டிகிரி வெப்பம் பதிவானது. சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் இதற்கு முன்பு பதிவான வெப்பநிலை அளவுகளை கடந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், வாஷிங்டன் போன்ற நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது.

வெப்ப அலையால் பலர் அம்மை, சிறுநீர் கடுப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழப்பு காரணமாக ஒரு நிமிடத்திற்கு 6 பேர் வீதம் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் அபாயகரமான நிலையை பொதுமக்கள் சந்திந்து வருகிறார்கள்.

சமூக ஆர்வலரான கிரெட்டா தன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதுவரை பதிவு செய்யப்படாத வெப்ப அளவுகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இன்னும் அதிக வெப்பமான நாட்கள் வர இருக்கின்றன. இது ஒரு அவசர நிலை” என்று பதிவிட்டுள்ளார்.

வெப்ப அலைவீச்சை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலைவீச்சு காரணமாக கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.