ஆமதாபாத், குஜராத்தில் விபத்து நடந்த பாலத்தில் திரண்டிருந்த கூட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் புகுந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் சர்கேஜ் – காந்திநகர் நெடுஞ்சாலையில் இஸ்கான் பாலம் உள்ளது. இதில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு சென்ற கார், அந்த வழியே சென்ற லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள், பாலத்தின் மீது ஏறி வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு கார், பாலத்தில் விபத்தை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த மேலும் சிலரை மீட்ட போலீசார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த ஒன்பது பேரில் போக்குவரத்தை சீரமைக்க சென்றிருந்த கான்ஸ்டபிள் மற்றும் ஊர்க்காவல் படைவீரரும் அடங்குவர்.
கூட்டத்துக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர்.
இதில் காயம் அடைந்த டிரைவர் மற்றும் விபத்தில் காயம் அடைந்த 10 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement