ஶ்ரீவில்ல்புத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இத்தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வைணவ திருத்தலங்களில் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில் முதன்மையானது. ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் உலகப் புகழ்பெற்றது. ஆழ்வார்களில் முதன்மையானவர்களாகிய ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த தலம் என்பதால் பெரும் சிறப்பு கொண்டது.
ஆண்டாள் அவதார திருநாளான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நடைபெறும். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் மிக முக்கியமான திருவிழா இது. இத்திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
ஆடிப்பூர தேரோட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 18-ந் தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழாவின் 7-ம் நாளில் ஆண்டாள் ரெங்கமன்னார் சயன சேவை நிகழ்ச்சி நடந்தது. ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
ஆடிப்பூர விழாவில் மிக முக்கியமான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை அதிகாலை ஆண்டாள் ரெங்மன்னார் சிறப்பு அபிஷேகம் நடபெறும். பின்னர் கீழ ரத வீதிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் கொண்டுவரப்பட்டு தேரில் எழுந்தருளச் செய்வர்.
நாளை சனிக்கிழமை காலை 8.05 மணிக்கு ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் தொடங்குகிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இத்தேரோட்டத்தை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இத்திருவிழாவை முன்னிட்டு ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.