சென்னை: அண்ணாமலையின் நடைபயணத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட உள்ளது. இந்த புகார் பெட்டியை பாஜக நிர்வாகிகள் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தினர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் வரும் 28-ம் தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. நடைபயணத்தில் இடம்பெற உள்ள மக்கள் புகார் பெட்டி அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பெட்டியில், ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, கள்ளச்சாராயம், கட்டப் பஞ்சாயத்து,வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் செலுத்தினால்,அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் நேர்மையான, ஊழலற்ற, வளர்ச்சியைத் தரும் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும். பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்களிடம் கொண்டுசேர்த்து, பாஜக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அண்ணாமலை நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
அமித் ஷா வருகை: திமுக ஊழல் ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நடைபயணத்தின் இலக்கு. வரும் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேசுவரத்தில் நடைபயணத்தை தொடங்கிவைத்து, அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.
10 லட்சம் புத்தகங்கள்: அண்ணாமலையின் நடைபயணம் 39 மக்களவைத் தொகுதிகள், 234 சட்டப்பேரவைத் தொகுதிகளை கடந்து செல்லும்.வழியெங்கும், தமிழுக்கும், தமிழகத்துக்கும் பிரதமர் மோடி செய்தவை குறித்த 10 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், அண்ணாமலை சார்பில் ஒருகோடி குடும்பங்களுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.
தமிழ்த் தாயின் சிலை அமைப்பதற்காக, தமிழகம் முழுவதும் புனித மண் சேகரிக்கப்படும். மேலும், பல்வேறு பகுதிகளில் 11 பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களும் நடைபெறும். அவற்றில் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களும் நடைபெறும்.
இந்த நடைபயணம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும்.
பிரதமர் பங்கேற்க வாய்ப்பு: இந்த நடைபயணம், அதிமுகவிடம், பாஜகவின் பலத்தைக் காட்டுவதற்கான யாத்திரை அல்ல. நடைபயண நிறைவு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் மட்டும் அல்ல, 543 தொகுதியிலும் மோடி போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பலாம். ஆனால், அவர் போட்டியிடும் தொகுதியை பாஜக தலைமைதான் முடிவு செய்யும்.
புகார் பெட்டியில், நயினார் நாகேந்திரனின் மகன் தொடர்புடைய நிலப்பதிவு முறைகேடு புகாரையும் செலுத்தலாமா என்று கேட்கிறீர்கள். தாராளமாக அந்தப் புகாரை வழங்கலாம். அதன் மீது எந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதன்படி நடவடிக்கை எடுப்போம். குறிப்பிட்ட புகாரைத்தான் செலுத்த வேண்டுமென நாங்கள் வரையறை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.