சென்னை: மணிப்பூரில் பெண்கள் மீதுநிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் முற்றிலும் மனமுடைந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன். நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது? வெறுப்புணர்ச்சியும், நச்சுப் பேச்சும் மனிதத்தன்மையின் ஆன்மாவையே அசைத்துப் பார்க்கின்றன. இதுபோன்ற கொடுஞ்செயல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இரக்கமும், மரியாதையும் கொண்ட ஒரு சமூகத்தை வளர்த்தெடுப்பதை நோக்கிப் பணியாற்ற வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கொடூரமான, மிருகத்தனமான, மனிதநேயமற்ற செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுதரவும், மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆறுதல் வார்த்தை கூறாத பிரதமர் மோடி, பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார். இச்சம்பவம் இந்தியாவுக்கே மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவலநிலைக்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: மணிப்பூரில் நடந்த இந்த கொடிய குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரானவை; மனிதர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்பவை. இதற்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்: மணிப்பூரில் நிகழ்ந்த இழிசெயலால் நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட தவறிய பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற முறையில் பகிரங்க மன்னிப்பு கோருவதுடன், பெண்களை சீரழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கவும் வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மணிப்பூரில் உள்ள மாநில பாஜக அரசு, பதவியில் நீடித்திருக்க எள்ளளவும் அருகதையில்லை. இதுவரை நடந்துள்ள கொடூரங்களுக்கு மணிப்பூர் முதலமைச்சரும், பிரதமர் மோடியுமே பொறுப்பேற்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த பெண் இனத்துக்கே ஏற்பட்ட களங்கம். உலக நாடுகளை சுற்றி வரும் பிரதமர் மோடி, நமது நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்றசம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
விசிக தலைவர் திருமாவளவன்: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி வதை செய்யும் பேரவலம் நிகழ்ந்திருப்பது ஒட்டுமொத்த தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதில்தொடர்புடைய மனித விலங்குகளை உடனே கைது செய்ய வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பெண்களுக்கு எதிராக நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்துசட்டத்தின் முன் நிறுத்தி கடும்தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வி.கே.சசிகலா, சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.